வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார். டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தகவல்


வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார். டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தகவல்
x
தினத்தந்தி 21 Feb 2022 7:36 PM IST (Updated: 21 Feb 2022 7:36 PM IST)
t-max-icont-min-icon

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுவதாக டி.ஐ.ஜி. ஆனி விஜயா தெரிவித்தார்.

குடியாத்தம்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுவதாக டி.ஐ.ஜி. ஆனி விஜயா தெரிவித்தார்.

டி.ஐ.ஜி. ஆய்வு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையையொட்டி இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  

இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேற்று வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் குறித்து போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கினார். அப்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, நிர்மலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து டி.ஐ.ஜி. நிருபர்களிடம் கூறியதாவது:-

5,000 போலீசார் பாதுகாப்பு

வேலூர் சரகத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு மாநகராட்சி, 16 நகராட்சிகள், 25 பேருராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 910 வார்டுகளுக்கு 1,840 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றது. இதேபோல் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.

வேலூர் சரகத்தில் 19 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் வேலூர் சரகத்தில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது வீண் பிரச்சினைகளில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
குடியாத்தம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மோப்ப நாய் அக்னி மூலம் போலீசார் சோதனை நடத்தினர். மெட்டல் டிடெக்டர் மூலமும் சோதனை நடத்தினர்.

Next Story