தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 21 Feb 2022 7:57 PM IST (Updated: 21 Feb 2022 7:57 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை

பாளையங்கோட்டை தியாகராஜநகர் ரெயில்வே கேட்டை கடக்கும் சாலையானது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வாகனங்களில் கடக்கும் போது தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். இரவு நேரத்தில் அந்த பகுதியில் போதிய வெளிச்சமும் இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
அருண், மகாராஜநகர்.

வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

நெல்லையில் இருந்து ரெட்டியார்பட்டி வழியாக சாத்தான்குளம் செல்லும் சாலையில் ஏராளமான வேகத்தடைகள் உள்ளன. குறிப்பாக ரெட்டியார்பட்டிக்கும், முனைஞ்சிப்பட்டிக்கும் இடையே சுமார் 20 கிலோ மீட்டருக்கு 15-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதுவும் இந்த வேகத்தடைகள் மிக உயரமாக போடப்பட்டு உள்ளது. அதில் வர்ணமும் பூசப்படாமல் இருக்கிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி வேகத்தடையை முறையாக அமைக்கவும், வர்ணம் பூசவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஷகிலா, ரெட்டியார்பட்டி.

எரியாத தெருவிளக்குகள்

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து முதலியார்பட்டி புதுமனை வடக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த தெருவில் பல நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இரவு நேரங்களில் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அச்சப்படுகிறார்கள். மேலும், தெரு நாய்கள் தொல்லையும் அதிகமாக இருப்பதால், வேலைக்கு சென்று இரவு நேரங்களில் வீடு திரும்புபவர்களை துரத்துகிறது. ஆகவே, பொதுமக்களின் நலன் கருதி தெரு விளக்குகளை எரிய வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
திருக்குமரன், கடையம்.

பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

குருவிகுளத்தில் இருந்து தடம் எண் 28 அரசு டவுன் பஸ் மீன்துள்ளி, ஜமீன் இலந்தைகுளம், கோ.மருதப்பபுரம், கே.ரெட்டியபட்டி, சண்முகநல்லூர் வழியாக சங்கரன்கோவிலிலுக்கு தினமும் காலை, மாலை இயக்கப்பட்டு வந்தது. இதனால் இந்த கிராமங்களில் உள்ள மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த பயன் அடைந்தனர். கடந்த 2019-ம் ஆண்டு கே.ரெட்டியபட்டி முதல் சண்முகநல்லூர் வரையிலான சாலை அமைக்கும் பணி நடைபெற்றதால், இந்த பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால், தற்போது சாலை பணிகள் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகிவும் இதுவரை இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜகோபால், கோ.மருதப்பபுரம்.

மின்கம்பம் சீரமைக்கப்படுமா? 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிச்சனார் தோப்பு கோசல்ராம் நகரில் பொதுக்கழிப்பிடம் முன்பு உள்ள மின்கம்பம் சிமெண்டு பூச்சிகள் பெயர்ந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதேபோல் இந்த மின்கம்பத்தில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் பகுதியில் உள்ள 2 மின்கம்பங்களும் மோசமாக இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே, பொதுமக்களின் நலன் கருதி அந்த மின்கம்பத்தை சீரமைக்க அல்லது மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சித்திரைவேல், ஸ்ரீவைகுண்டம்.

--------------

Next Story