கூடலூர் பகுதியில் பாகற்காய் அறுவடை தொடங்கியது


கூடலூர் பகுதியில் பாகற்காய் அறுவடை தொடங்கியது
x
தினத்தந்தி 21 Feb 2022 8:01 PM IST (Updated: 21 Feb 2022 8:01 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் பாகற்காய் அறுவடை தொடங்கி உள்ளது. எனவே கட்டுப்படியான விலை கிடைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கூடலூர்

கூடலூர் பகுதியில் பாகற்காய் அறுவடை தொடங்கி உள்ளது. எனவே கட்டுப்படியான விலை கிடைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். 

அறுவடை சீசன் தொடக்கம்

கூடலூர் பகுதியில் கோடைகால பயிர்களான பாகற்காய், அவரைக்காய், புடலங்காய், பஜ்ஜி மிளகாய் உள்பட காய்கறி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக புத்தூர்வயல், கம்மாத்தி, பாடந்தொரை, ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சி பகுதியில் பாகற்காய் சாகுபடி செய்யப்பட்டது.

அந்த பாகற்காய் தற்போது அறுவடைக்கு தயாரானதால் அவற்றை வியாபாரிகள் அறுவடை செய்து வருகிறார்கள். அறுவடை செய்த பகுதிகளுக்கே மொத்த வியாபாரிகள் சென்று அவற்றை கொள்முதல் செய்து விற்பனைக்காக மேட்டுப்பாளையம், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்து வருகிறார்கள். 

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கட்டுப்படியான விலை

தற்போது பாகற்காய் சீசன் தொடங்கி இருந்தாலும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பது இல்லை. விவசாயிகளுக்கு கிலோ ரூ.20 முதல் 25 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. 

ஆனால் வெளிமார்க்கெட்டில் கூடுதல் தொகைக்கு விற்கப்படுகிறது. இதனால் இதை நம்பி சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 

கூடலூரில் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இங்கு சாகுபடி செய்யும் பாகற்காயை விற்று பயன்பெற கூடலூரிலேயே ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் திறக்க வேண்டும். அத்துடன் கட்டுப்படியான விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story