மின் ஊழியர் என்று கூறி போலி மீட்டர் பொருத்தி பணம் வசூல்


மின் ஊழியர் என்று கூறி போலி மீட்டர் பொருத்தி பணம் வசூல்
x
தினத்தந்தி 21 Feb 2022 8:09 PM IST (Updated: 21 Feb 2022 8:09 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே மின் ஊழியர் என்று கூறி போலி மீட்டர் பொருத்தி பணம் வசூலித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொள்ளிடம்:-

கொள்ளிடம் அருகே மின் ஊழியர் என்று கூறி போலி மீட்டர் பொருத்தி பணம் வசூலித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள தைக்கால் கிராமம் ஜாகிர்உசேன் தெருவை சேர்ந்த அப்துல்உசேன் மனைவி உம்மர்கனி (வயது30). இவர் தனது வீட்டில் மின் இணைப்பு கேட்டு கொள்ளிடம் மின் வாரிய அலுவலகத்துக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி 55 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் மின்சார மீட்டர் பெட்டிகளை எடுத்துக்கொண்டு உம்மர்கனி வீட்டுக்கு வந்தார். 
அவர் தன்னை மின் வாரிய ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு மின் இணைப்பு கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தார். அதனை நம்பிய உம்மர்கனி மின் இணைப்பு கொடுக்க சம்மதித்தார். 

பணம் வசூல்

உடனே அந்த மர்ம நபர் தான் எடுத்துவந்த பல மீட்டர் பெட்டிகளில் ஒரு புதிய மீட்டர் பெட்டியை எடுத்து அவருடைய வீட்டில் பொருத்தி மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பையும் வழங்கினார். பின்னர் மின் இணைப்புக்கான கட்டணமாக ரூ.3 ஆயிரத்து 920-ஐ உம்மர்கனியிடம் இருந்து வசூலித்து விட்டு அந்த நபர் தான் வந்த மொபட்டில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 
இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் மின்கட்டணம் கணக்கீடு செய்ய வந்த ஊழியர்கள் உம்மர்கனியின் வீட்டுக்கு சென்றபோது போலியாக மீட்டர் பொருத்தி இருப்பது தெரியவந்தது. 

அதிகாரிகள் விசாரணை

இதையடுத்து அவர்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சீர்காழி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் (வடக்கு) விசுவநாதன் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். 
அதன்படி கொள்ளிடம் மின்வாரிய உதவி பொறியாளர் மாரிமுத்து, வருவாய் மேற்பார்வையாளர் மணி, கணக்கீட்டு ஆய்வாளர் திருலோகச்சந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று தைக்காலில் உள்ள உம்மர்கனியின் வீட்டுக்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். 

மின் இணைப்பு துண்டிப்பு

அப்போது உம்மர்கனியின் வீட்டுக்கு வந்த நபர் குறித்த விவரங்களை கேட்டறிந்த அதிகாரிகள், போலி மின் மீட்டரையும் பார்வையிட்டனர். மேலும் மர்ம நபர் கொடுத்திருந்த மின் இணைப்பையும் அதிகாரிகள் துண்டித்தனர். 
இதுகுறித்து கொள்ளிடம் மின்சார வாரிய உதவி பொறியாளர் மாரிமுத்து கொள்ளிடம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். 
மின் ஊழியர் என்று கூறி போலி மீட்டர் பொருத்தி பணம் வசூலிக்கப்பட்டு இருப்பது கொள்ளிடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story