கிருஷ்ணகிரியில் இன்று ஓட்டு எண்ணிக்கை: வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரியில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி:
கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி நகராட்சியில் பதிவான ஓட்டுகள் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. இதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயசந்திரபானுரெட்டி நேற்று மாலை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
4 இடங்களில் எண்ணிக்கை
தமிழக தேர்தல் ஆணைய உத்தரவுப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 8 உள்ளாட்சி அமைப்புகளில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 4 இடங்களில் நடக்கிறது. காலை 8 மணிக்கு ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்க உள்ளது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
கொரோனா தடுப்பு விதிமுறைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 424 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 121 சுற்றுகளாக 35 மேசைகளில் எண்ணப்படுகின்றன. 4 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது.
வாக்கு எண்ணும் மையத்திற்கு வருபவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். வேட்பாளர்களுடன் வருபவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் வர அனுமதி கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார், நகராட்சி ஆணையாளர் முருகேசன், தாசில்தார் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story