கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
பாலக்கோடு அருகே கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
தர்மபுரி:
மனுக்கள் பெட்டி
தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று வந்த பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட தங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை, பெட்டியில் போட்டு சென்றனர்.
யானையால் பயிர்சேதம்
இந்த நிலையில் பாலக்கோடு தாலுகா ஈச்சம்பள்ளம், செக்கல்நத்தம், சொக்கன்கொட்டாய், சீரியம்பட்டி, கஞ்சால்பெயில் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு போட்டனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோட்டூர் மலை வனப்பகுதியில் இருந்து கடந்த 2 மாதங்களாக எங்கள் கிராம பகுதிகளில் நுழையும் காட்டு யானை விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல், தக்காளி, கரும்பு, ராகி, மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் மற்றும் வாழை, தென்னை ஆகியவற்றை சேதப்படுத்தி வருகிறது. இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த யானையின் அட்டகாசம் தொடர்கிறது. வனத்துறையினர் எங்கள் கிராம பகுதிகளில் முகாமிட்டு அந்த யானையை விரட்டிய போதிலும், அடிக்கடி விவசாய நிலங்களில் அந்த யானை நுழைந்து பயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
உரிய இழப்பீடு
இதுவரை சுமார் 300 ஏக்கர் விவசாய பயிர்கள் இந்த யானையால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அச்சத்துடன் கிராமத்தில் வசிக்கிறோம். இந்த பிரச்சினை தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கோரிக்கை மனு அளித்துள்ளோம். எனவே இந்த யானை மீண்டும் கிராம பகுதிக்குள் நுழையாத வகையில் வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட வேண்டும். மேலும் யானையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு உரிய இழப்பீடு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு விரைவாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர். மனு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story