வாலிபர் பலி, போலீஸ்காரர் படுகாயம்


வாலிபர் பலி, போலீஸ்காரர் படுகாயம்
x
தினத்தந்தி 21 Feb 2022 10:41 PM IST (Updated: 21 Feb 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். உடன் வந்த அவரது நண்பரான போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.

சின்னமனூர்:
சின்னமனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். உடன் வந்த அவரது நண்பரான போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார். 
சரக்கு வேன் மோதியது
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 34). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். ரஞ்சித்குமாரும், அதே ஊரை சேர்ந்த போலீஸ்காரரான ராதாகிருஷ்ணனும் (32) நண்பர்கள். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சின்னமனூருக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து 2 பேரும் மார்க்கையன்கோட்டை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். 
சின்னமனூர் சிவகாமியம்மன் கோவில் அருகே நான்கு ரோடு சந்திப்பான திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் வந்தபோது, எதிரே கம்பத்தில் இருந்து சரக்கு வேன் ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
வாலிபர் பலி
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ரஞ்சித்குமார் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.‌ ராதாகிருஷ்ணன் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
சாலை மறியல்
இந்தநிலையில் ரஞ்சித்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்வதற்காக ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட்டது. விபத்து நடந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் வந்தபோது, ரஞ்சித்குமாரின் உறவினர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவரது உடல் வைத்திருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை சாலையில் நிறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதுகுறித்து தகவல் அறிந்த சின்னமனூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அடிக்கடி விபத்து நடக்கும் சின்னமனூர் நான்கு ரோடு சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து தீர்வு காண வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கினர். இதையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றனர். 
இந்த சம்பவத்தால் சின்னமனூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story