இன்று வாக்கு எண்ணிக்கை
கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மதியத்துக்கு பிறகு முடிவுகள் வெளியாகும்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் கடலூர் மாநகராட்சி மற்றும் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, வடலூர் ஆகிய நகராட்சிகள், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கைகொண்டான், பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணம், லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை, சேத்தியாத்தோப்பு ஆகிய பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடந்தது.
இதில் கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளுக்கு 286 பேரும், நகராட்சிகளில் உள்ள 180 வார்டுகளுக்கு 831 பேரும், பேரூராட்சிகளில் 222 பதவிகளுக்கு 887 பேரும் என மொத்தம் 2004 பேர் போட்டியிட்டனர். இதில் நகராட்சியில் 2 பேரும், பேரூராட்சிகளில் 8 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் 1994 பேர் களத்தில் இருந்தனர். இதில் 437 பதவிகளுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது.
வாக்கு எண்ணிக்கை
இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும், அன்று இரவே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 14 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள், தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அனைத்தும் பொதுவான வாக்கு எண்ணும் அறைக்கு முதலில் கொண்டு செல்லப்படுகின்றன.
தபால் ஓட்டு
பின்னர் முதலில் ஓட்டு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டு உள்ள மேஜைகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும். தொடர்ந்து ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் 3 ஓட்டு எண்ணுபவர்கள் பணியில் இருப்பார்கள். இதையடுத்து காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இதில் முதலில் தபால் ஓட்டுகளும், அதன் பிறகு வாக்குப்பதிவு எந்திரங்களில பதிவான வாக்குகளும் எண்ணப்படுகிறது.
இதில் வாக்குகள் எண்ணப்பட்டதும் சுற்றுகள் வாரியாக முடிவு அறிவிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணும் பணியில் சுமார் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளுக்கான பதவிகளுக்கும் சில ஆயிரம் ஓட்டுகள் மட்டும் எண்ண வேண்டியிருப்பதால் இன்று மதியத்துக்கு பிறகு முடிவுகள் தெரியவரும்.
3 அடுக்கு பாதுகாப்பு
ஆனால் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 20 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் உள்ளதால் இன்று பிற்பகலில் இருந்து படிப்படியாக முடிவுகள் தெரியவரும். முடிவுகள் அனைத்தையும் இரவுக்குள் முழுமையாக வெளியிட மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, வீடியோவிலும் காட்சிகள் பதிவு செய்யப்படுகிறது. இதில் அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கான பதவிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனுக்குடன் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ்கள் வழங்கப்படும்.
4-ந் தேதி மறைமுக தேர்தல்
இதைத் தொடர்ந்து வருகிற 4-ந் தேதி மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் வாக்களித்து தேர்வு செய்துள்ள வார்டு உறுப்பினர்கள், இந்த பதவிகளுக்கான தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களை தேர்வு செய்வார்கள்.
Related Tags :
Next Story