விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா


விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா
x
தினத்தந்தி 21 Feb 2022 11:02 PM IST (Updated: 21 Feb 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் நேற்று விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் திடீரென ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணிகளுக்கான பணிஆணைகள் ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் விருத்தாசலம் ஒன்றியம் எருமனூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளருக்கு பணி ஆணை வழங்காமல், பணி மேற்பார்வையாளருக்கு வழங்கியதை வன்மையாக கண்டிப்பது,  திட்டப்பணிகளை ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கினால் சமூக தணிக்கைக்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

நடவடிக்கை

இந்த போராட்டத்தில் விருத்தாசலம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் நீதிராஜன், மாவட்ட கூட்டமைப்பு தலைவர் முத்துக்குமாரசாமி, மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், எருமனூர் ஊராட்சி மன்ற தலைவர் சவுமியா வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் தாசில்தார் தனபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையேற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த போராட்டத்தால் விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story