சார்பதிவாளர்-பத்திர எழுத்தர் கைது


சார்பதிவாளர்-பத்திர எழுத்தர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2022 11:22 PM IST (Updated: 21 Feb 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில், லஞ்ச வழக்கில் சார்பதிவாளர்-பத்திர எழுத்தர் கைது செய்யப்பட்டனர்.

மன்னார்குடி;
மன்னார்குடியில் லஞ்ச வழக்கில் சார்பதிவாளர்-பத்திர எழுத்தர்   கைது செய்யப்பட்டனர். 
பத்திரப்பதிவு செய்ய
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள செருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வினோதினி(வயது 40). இவர், தனது நிலத்தை பத்திரப்பதிவு செய்ய மன்னார்குடி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார்.  
அந்த இடத்தில் சுமார் 300 சதுர அடியில் வீடு இருந்ததால் அதை இடித்து விட்டதாகவும், அந்த நிலத்தில் வீடு இருந்ததாக குறிப்பிடப்பட்டிருப்பதை பத்திரத்தில் இருந்து நீக்கம் செய்து சான்றிதழ் தர வேண்டும் என மன்னார்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் வினோதினி விண்ணப்பித்தார். 
ரூ.15 ஆயிரம் லஞ்சம்
அவ்வாறு சான்றிதழ் அளிக்க வேண்டுமானால் தனக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என வினோதினியிடம், சார்பதிவாளர் தினேஷ்(35) கேட்டுள்ளார். 
மேலும் லஞ்ச பணத்தை பத்திர எழுத்தர் கென்னடி(52) என்பவர் மூலம் பெற்றுக்கொள்வதாகவும் சார்பதிவாளர் தினேஷ் கூறியுள்ளார். 
ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள்
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வினோதினி இது குறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால், இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, சித்ரா மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வினோதினியிடம் கொடுத்தனர். 
போலீசார் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் வினோதினி சார்பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள பத்திர எழுத்தர் கென்னடியின் அலுவலகத்துக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரும் சென்றனர். 
லஞ்சம் வாங்கியது உறுதியானது
கென்னடியின் அலுவலகத்தை அடைந்த வினோதினி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பத்திர எழுத்தர் கென்னடியிடம் கொடுத்தார். பணத்தை கென்னடி வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கென்னடியை பணத்துடன் பிடித்து மன்னார்குடி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். 
அங்கு சார்பதிவாளர் தினேஷ் மற்றும் பத்திர எழுத்தர் கென்னடி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சார்பதிவாளர் தினேசுக்காக பத்திர எழுத்தர் கென்னடி லஞ்ச பணத்தை வாங்கியது உறுதி செய்யப்பட்டது. 
சார்பதிவாளர்-பத்திர எழுத்தர் கைது
இதைத்தொடர்ந்து சார்பதிவாளர் தினேஷ் மற்றும் புரோக்கராக செயல்பட்ட பத்திர எழுத்தர் கென்னடி ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கைதான இருவரிடமும் தொடர்ந்து தீவிர  விசாரணை நடந்து வருகிறது. 
லஞ்ச வழக்கில் சார் பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தர் கைது செய்யப்பட்ட சம்பவம் மன்னார்குடி சார்பதிவாளர் அலுவலக பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

Next Story