பேரூராட்சி அலுவலகத்தை வேட்பாளர்கள் முற்றுகை


பேரூராட்சி அலுவலகத்தை வேட்பாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 21 Feb 2022 11:31 PM IST (Updated: 21 Feb 2022 11:31 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தை வேட்பாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்கான வாக்குப்பதிவு மையம் திருவெண்ணெய்நல்லூர் காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இங்கு வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர் அல்லது முகவர் இவர்களில் யாரேனும் ஒருவர் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அ.தி.மு.க. வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஒன்று சேர்ந்து  திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இது பற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், பேரூராட்சி இளநிலை உதவியாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள்,வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல வேட்பாளருடன், ஒரு முகவர் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கூறினர். இதை கேட்ட அதிகாரிகள், இது குறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story