மாசி மகா சிவராத்திரி திருவிழா
ராமேசுவரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 1-ந் தேதி சிவராத்திரி அன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 1-ந் தேதி சிவராத்திரி அன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
மகா சிவராத்திரி திருவிழா
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டின் சிவராத்திரி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று காலை 10 மணி அளவில் சாமி சன்னதி எதிரே நந்தி மண்டபம் பகுதியில் உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து புனித நீரால் கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. அப்போது கொடிமரம் எதிரே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்வு மற்றும் பூஜைகளை ஸ்ரீராம் குருக்கள் செய்தார்.
விழாவின் 3-வது நாளான நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்குமேல் சாமி- அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவதால் காலை 6 மணி முதல் இரவு வரையிலும் கோவில் தீர்த்தங்களில் நீராடவும், பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1-ந் தேதி தேரோட்டம்
முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் நாள் விழாவான வருகிற 1-ந் தேதி சிவராத்திரி அன்று காலை 8 மணியில் இருந்து 9 மணிக்குள் சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது.
10-வது நாள் நிகழ்ச்சியாக மாசி அமாவாசையையொட்டி வருகிற 2-ந் தேதி பகல் 1.30 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நேற்றைய கொடியேற்ற நிகழ்ச்சியில் ராஜா குமரன் சேதுபதி, இணை ஆணையர் பழனிகுமார், மேலாளர் சீனிவாசன், பேஷ்கார்கள் கமலநாதன் ராமநாதன், முனியசாமி, அண்ணாதுரை மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாரிராஜன், யாத்திரை பணியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கரன், விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் முரளிதரன், இந்து தேசிய கட்சியின் மாநில செயலாளர் ஹரிதாஸ், முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சி சரவணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story