வாக்குகள் எண்ணும் பணிக்கு 246 பேர் நியமனம்


வாக்குகள் எண்ணும் பணிக்கு 246  பேர் நியமனம்
x
தினத்தந்தி 22 Feb 2022 1:07 AM IST (Updated: 22 Feb 2022 1:07 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 9 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணிக்கு 246 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

விருதுநகர், 
மாவட்டத்தில் 9 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணிக்கு 246  பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.  
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:- 
விருதுநகர் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 5 நகராட்சிகள், மற்றும் 9 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்ற நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 360 பதவிகளுக்கு 658 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை நாளை (அதாவது இன்று) காலை 8 மணிக்கு 9 வாக்கு எண்ணிக்கை மையங்களில் தொடங்குகிறது. 9 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் வாக்கு எண்ணுவதற்காக 82 மேஜைகள் போடப்பட்டுள்ளன. 
தபால் வாக்குப்பதிவு 
 சிவகாசி மாநகராட்சியில் வாக்கு எண்ணிக்கைக்கு 10 மேஜைகளும், அருப்புக்கோட்டை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிகளுக்கு தலா 12 மேஜைகளும், சாத்தூர் நகராட்சிக்கு 6 மேஜைகளும், விருதுநகர் நகராட்சிக்கு 10 மேஜைகளும், பேரூராட்சிகளுக்கு தலா 2 மேஜைகளும் ஆக மொத்தம் 82 மேஜைகள் வாக்கு எண்ணிக்கைக்கு போடப்படுகின்றன.
 ஒவ்வொரு மேஜையிலும் 3 அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு மேஜையிலும் வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முகவர் மட்டும் அனுமதிக்கப்படுவர். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணப்படும்.
 நுண் பார்வையாளர்கள்
15 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு 45 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தலா 3 நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்கள் வங்கிப்பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அறையில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை எடுப்பதை கண்காணிப்பதற்கும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கவும், வாக்கு எண்ணிக்கை மையத்தை கண்காணிப்பதற்கும் 3 நுண்பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
 இவ்வாறு அவர் கூறினார். 

Next Story