தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
குரங்குகள் தொல்லை
தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டி கிராமம் தேவாரம் நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சுற்றி பாரீஸ் நகர், ரஹ்மான் நகர், அபிராமி நகர், மைக்கேல் நகர் போன்ற தெருக்கள் உள்ளன. இந்த பகுதியில் பகல் நேரத்தில் குரங்குகள் கூட்டம், கூட்டமாக வந்து வீட்டுக்குள் புகுந்து பொருட்களை எடுத்து செல்கின்றன. மேலும் சிறுவர்-சிறுமியர் மற்றும் பொதுமக்களை குரங்குகள் விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் தெருவில் நடந்து செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-பொதுமக்கள், தேவாரம் நகர்.
தார்ச்சாலை வேண்டும்
வல்லம் பேரூராட்சி மின்நகர், திருவள்ளுவர் தெருவில் பல ஆண்டுகளாக தார்ச்சாலை அமைத்து தரப்படவில்லை. தற்போது அந்த பகுதியில் உள்ள மண்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை காலங்களில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். மேலும் அந்த பகுதியில் கழிவுநீர் செல்ல கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்ச்சாலை அமைத்து, கழிவுநீர் செல்ல கழிவுநீர் வாய்க்கால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், வல்லம்.
Related Tags :
Next Story