கர்நாடக சட்டசபை தொடர் முடக்கம்: பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து ஜனதா தளம் (எஸ்) தர்ணா
கர்நாடக சட்டசபை தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து ஜனதா தளம் (எஸ்) தர்ணா நடத்தியது.
பெங்களூரு:
வாய்ப்பு அளிக்கவில்லை
மந்திரி ஈசுவரப்பாவை நீக்க கோரி கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சட்டசபையில் பகல்-இரவாக உள்ளிருப்பு போராட்டத்தையும் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் சபை நடவடிக்கைகள் கடந்த 4 நாட்களாக முடங்கியுள்ளன. இந்த நிலையில் ஆளும் பா.ஜனதா-காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து ஜனதா தளம் (எஸ்) சார்பில் தர்ணா போராட்டம் விதான சவுதா வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு நடைபெற்றது. ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை கூட்டத்தை இந்த அரசு சரியான முறையில் நடத்தவில்லை. சட்டசபையின் நேரத்தை காங்கிரஸ் தர்ணா நடத்தி வீணடித்து வருகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை இரண்டு தேசிய கட்சிகளும் நிறைவேற்ற தடையாக இருக்கின்றன. மக்களின் பிரச்சினைகள் குறித்து சட்டசபையில் விவாதித்து இருக்க வேண்டும். ஆனால் அதற்கு பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வாய்ப்பு அளிக்கவில்லை.
மின்வெட்டு அமல்
ஹிஜாப் மற்றும் காவி துண்டு ஆகியவற்றால் 2 மதங்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஹிஜாப்பால் குழந்தைகளின் கல்வி பாழாகிவிட்டது. இந்த விஷயங்கள் குறித்து சபையில் விவாதித்து இருக்க வேண்டும்.
சபையை நடத்த அரசுக்கு ஆர்வமிருந்தால் தர்ணா நடத்தும் உறுப்பினர்களை வெளியேற்றி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு ஈசுவரப்பா விவகாரம் மட்டுமே முக்கிய பிரச்சினையாக உள்ளது. ஆனால் விவாதிக்க பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதனால் காங்கிரஸ் உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு சபையை நடத்த வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story