அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியல்
மதுக்கூரில், பாலியல் புகாரில் கைதான ஆசிரியரை விடுதலை செய்யக்கோரி அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுக்கூர்:
மதுக்கூரில், பாலியல் புகாரில் கைதான ஆசிரியரை விடுதலை செய்யக்கோரி அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாலியல் புகாரில் ஆசிரியர் கைது
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள மதுக்கூர் வடக்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ராஜ்குமார். இவர், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதே பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவி ஒருவர், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆசிரியர் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாணவிகள் சாலைமறியல்
இந்த நிலையில் நேற்று நண்பகல் 12 மணி அளவில் அந்த பள்ளி மாணவிகள் சிலர், கைதான ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், ஆசிரியருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். ஆசிரியரை விடுதலை செய்யக்கோரியும், அவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் கோஷமிட்டனர்.
மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதை அறிந்த மற்ற வகுப்பு மாணவிகளும் அவர்களுடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட வகுப்பு அறையில் இருந்து சாலையை நோக்கி வந்தனர். அப்போது பணியில் இருந்த ஆசிரியர்கள் மாணவிகள் வெளியேறாமல் இருக்க பள்ளி நுழைவு வாயில் கதவை சாத்தினர். இதனால் அந்த மாணவிகள் பள்ளி வளாகத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி முன்பு குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதனையடுத்து பட்டுக்கோட்டை தாசில்தார் கணேஷ்வர், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
அப்போது ஆசிரியர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அதனை திரும்பப் பெற வேண்டும். ஆசிரியரை மீண்டும் இதே பள்ளியில் பணியில் அமர்த்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை பரிசீலித்து உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர், மாணவிகளிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து மாணவிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து வகுப்பறைக்கு சென்றனர். மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் மதுக்கூர்-மன்னார்குடி இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story