பெலகாவியில் ‘ஹிஜாப்’ அணிந்து வந்ததால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு - கல்லூரி முன்பு மாணவிகள் போராட்டம்


பெலகாவியில் ‘ஹிஜாப்’ அணிந்து வந்ததால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு - கல்லூரி முன்பு மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2022 1:27 AM IST (Updated: 22 Feb 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவியில், ஹிஜாப் அணிந்து வந்ததால் தேர்வு எழுத மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெலகாவி:

இடைக்கால தடை

  கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில், முஸ்லிம் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது. ஆனாலும் ஹிஜாப் அணிந்து வர அனுமதி கோரி பள்ளி, கல்லூரிகள் முன்பு முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  இந்த நிலையில் கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு, பி.யூ.சி. 2-ம் ஆண்டு திருப்புதல் தேர்வு தொடங்கி உள்ளது. நேற்று செய்முறை தேர்வும் நடந்தது. இந்த தேர்வில் பங்கேற்கும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தி தேர்வு எழுதாவிட்டால், மறுதேர்வு எழுத அனுமதி இல்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

ஹிஜாப்பை விடமாட்டோம்

  இந்த நிலையில் பெலகாவி டவுனில் உள்ள லிங்கராஜா என்ற கல்லூரியில் நேற்று பி.யூ.சி. 2-ம் ஆண்டு திருப்புதல் தேர்வு நடந்தது. அப்போது தேர்வு எழுத ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கல்லூரி முதல்வர் ஹிஜாப்பை கழற்றிவிட்டு தேர்வு எழுத செல்லுங்கள் என்று கூறினார். ஆனால் இதனை மாணவிகள் ஏற்க மறுத்ததால் 40 பேரையும் தேர்வு எழுத அனுமதிக்க கல்லூரி முதல்வர் மறுத்து விட்டார்.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். அப்போது மாணவிகள் கூறும்போது, எங்கள் கல்லூரியில் ஆடை கட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆனால் தற்போது ஹிஜாப் அணிய கூடாது என்கிறார்கள். இதனால் தேர்வை எழுத முடியவில்லை. இருப்பினும் எங்களுக்கு தேர்வு முக்கியமில்லை. ஹிஜாப்தான் முக்கியம். அதை ஒருபோது கழற்றமாட்டோம் என்றனர்.

அனுமதி மறுப்பு

  இதுபோல பெலகாவி மாவட்டம் கோகாக் டவுனில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியிலும் ஹிஜாப் அணிந்து மாணவிகள் தேர்வு எழுத சென்றனர். அவர்களை அனுமதித்தால் காவி துண்டு போட்டு வர எங்களை அனுமதிக்க வேண்டும் என்று இந்து மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

  இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதன்பின்னர் மாணவிகளை ஹிஜாப்பை கழற்றி விட்டு வரும்படி கல்லூரி நிர்வாகம் கூறியது. ஆனால் அதற்கு மாணவிகள் மறுத்ததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

Next Story