வாழப்பாடி வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வழிதவறி வந்த ஆண் கடமான் வனத்துறையினர் மீட்டனர்
வாழப்பாடி அருகே வனப்பகுதியில் இருந்து வழிதவறி ஊருக்குள் வந்த ஆண் கடமானை, வாழப்பாடி வனத்துறையினர் மீட்டனர்.
வாழப்பாடி,
வாழப்பாடி வனச்சரகம்
வாழப்பாடி வனச்சரகத்தில், அருநூற்றுமலை, கோதுமலை, சந்துமலை, பெலாப்பாடி மலை, நெய்யமலை மற்றும் குறிச்சி, செக்கடிப்பட்டி வெள்ளாளகுண்டம் உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன.
இந்த வனப்பகுதிகளில் விலங்குகளை வேட்டையாடுவதை வனத்துறையினர் தடுத்து, பாதுகாத்து வருவதாலும், வனத்தையொட்டிய கிராமங்களில் வசிக்கும் மக்களிடையே வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாலும், கடந்த 10 ஆண்டுகளில் வனவிலங்குகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, காட்டெருமை, புள்ளிமான், சருகுமான், கேளையாடு, நரி, காட்டுப்பன்றிகள் மற்றும் பல்வேறு வகையான குரங்குகள் என வனவிலங்குகள் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளன. இதனால் இரை மற்றும் தண்ணீர் தேடி வரும் மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியையொட்டி கிராமங்களுக்கு புகுவதும், பொதுமக்கள் ஒத்துழைப்போடு வனத்துறையினர் வனவிலங்குகளை மீட்டு மீண்டும் வனத்திற்குள் கொண்டு சென்று விடுவதும் தொடர்ந்து வருகிறது.
கடமான் மீட்பு
இந்தநிலையில் வாழப்பாடி வனச்சரக வனப்பகுதியில் இருந்து அரியவகை மான் இனமான ஆண் கடமான் ஒன்று நேற்று முன்தினம் மாலை வழிதவறி ஊருக்குள் வந்தது. அந்த மான், வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையம் கிராமத்தில் தாலுகா அலுவலகத்திற்கு பின்புறமுள்ள குமரேசன் என்பவரது விளைநிலத்தில் தஞ்சமடைந்தது.
இந்த மானை கண்ட இப்பகுதி பொதுமக்கள், இது குறித்து வாழப்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினர் அங்கு வந்து கடமானை மீட்டனர். மானின் காலில் காயம் ஏற்பட்டிருந்ததால், சேசன்சாவடியிலுள்ள வன ஆராய்ச்சி மையத்திற்கு அவர்கள் கொண்டு சென்றனர்.
சிகிச்சை
கால்நடை டாக்டர்களை வரவழைத்து மானுக்கு உரிய சிகிச்சை அளித்து, உயரதிகாரிகளின் ஆலோசனைக்கு பிறகு வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவதற்கு அல்லது சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டதற்கு, ‘வாழப்பாடி, சேர்வராயன்மலை, கல்வராயன் மலை வனப்பகுதியில் இதுவரை கடமான்கள் வாழ்ந்து வருவதாக தெரியவில்லை. தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ள சித்தேரி, தீர்த்தமலை வனப்பகுதியில் இந்த மான்கள் காணப்படுகின்றன. இந்நிலையில், வாழப்பாடியில், ஆண் கடமான் ஒன்று பிடிபட்டுள்ளதால், குறைந்து வரும் கடமான்கள் வாழப்பாடி வனப்பகுதியிலும் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது’ என்றனர்.
Related Tags :
Next Story