புளியங்குடியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் புகுந்த 2 பேர் கைது-கார் பறிமுதல் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மறியலால் பரபரப்பு
புளியங்குடியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் புகுந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர் அவர்களின் கார் பறிமுதல் செய்யப்பட்டது
புளியங்குடி:
புளியங்குடியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் புகுந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
வாக்கு எண்ணும் மையம்
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி மற்றும் சிவகிரி, ராயகிரி ஆகிய பேரூராட்சிகளில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு புளியங்குடியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் மேலும் சில கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி கட்டிடத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் ஒரு காரில் சிலர் சென்றதாக தகவல் பரவியது.
சாலை மறியல்
இதனையடுத்து அந்த கல்லூரி முன்பு நள்ளிரவில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் புளியங்குடி-சங்கரன்கோவில் மெயின்ரோட்டில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த கார் மீண்டும் கல்லூரியில் இருந்து வெளியே வந்தது. அங்கு இருந்த அரசியல் கட்சியினர் காரில் இருந்தவர்களை மடக்கிப்பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அரசியல் கட்சியினர் பிடித்து வைத்து இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பேச்சுவார்த்தை
அப்போது, அவர்கள் வாசுதேவநல்லூரை சேர்ந்த திவான் பக்கீர் மகன் காஜா முகைதீன் (வயது 38), சாகுல்ஹமீது மகன் நாகூர் மைதீன் (42) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதற்கிைடய வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றுவதற்காகத்தான் அவர்கள் 2 பேரும் கல்லூரிக்குள் சென்றனா் என மறியலில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினார்கள். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்ைத நடத்தினர். பின்னர் அரசியல் கட்சியினர் சிலர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட போலீசார் அனுமதி அளித்தனர். அதில் பிடிபட்ட 2 பேரும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள பகுதிக்கு செல்லவில்லை என்பது உறுதியானது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால், 2 பேரும் கல்லூரி வளாகத்தில் நின்று இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
2 பேர் கைது
மேலும் பிடிப்பட்ட 2 பேரையும் நேற்று அதிகாலை போலீசார் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் புளியங்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story