புதுமண்டபத்தில் இருந்த கடைகள் அகற்றம்


புதுமண்டபத்தில் இருந்த கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 21 Feb 2022 9:43 PM GMT (Updated: 21 Feb 2022 9:43 PM GMT)

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் இருந்த கடைகள் நேற்று அகற்றப்பட்டது. அந்த கடைகள் குன்னத்தூர் சத்திரத்திற்கு இடம் மாற்றப்பட்டது.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் இருந்த கடைகள் நேற்று அகற்றப்பட்டது. அந்த கடைகள் குன்னத்தூர் சத்திரத்திற்கு இடம் மாற்றப்பட்டது.

திருமலை நாயக்கர் கட்டிய புதுமண்டபம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு சித்திரை வீதியில் உள்ள ராஜகோபுரத்திற்கு எதிரே உள்ளது புதுமண்டபம். இந்த மண்டபம் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு திருமலைநாயக்கர் மன்னரால் கட்டப்பட்டது. மேலும் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் வைகாசி வசந்த உற்சவம், மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் ஆகிய திருவிழாக்கள் இங்குள்ள மண்டபத்தில் வைத்து தான் நடைபெறும். திருவிழா நாட்களை தவிர மற்ற நாட்கள் பக்தர்கள் அங்கு ஓய்வு எடுக்கும் இடமாக மாறியது. 
அதை தொடர்ந்து சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கோவிலில் பூஜைக்கு தேவையான குங்குமம், தாலி உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், துணி கடைகள், புத்தக கடைகள், இரும்பு மற்றும் சில்வா பாத்திரக்கடைகள், பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகள் செயல்பட்டு வந்தது.
மேலும் அந்த மண்டபத்தில் திருமலை நாயக்கர் மன்னரால் நிறுவப்பட்ட 28 அற்புத சிலைகள் உள்ளன. மீனாட்சி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த சிலைகளை கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு கோவில் நிர்வாகமும், தொல்லியல், சுற்றுலா துறையும் இணைந்து அந்த புதுமண்டபத்தையும், அங்குள்ள கலை நயமிக்க சிலைகள், தூண்களை காணும் வகையில் அருங்காட்சியமாக மாற்ற முடிவு செய்தது.

கடைகளை காலி செய்ய உத்தரவு

அதன்படி அங்குள்ள கடைகள் அனைத்தையும் அங்கிருந்து காலி செய்யுமாறு கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது. பின்னர் கடைக்காரர்கள் தங்களுக்கு மாற்று இடம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து புதுமண்டபம் அருகே உள்ள குன்னத்தூர் சத்திரத்தில் மாநகராட்சி சார்பில் கடைகள் கட்டி கொடுக்க அரசு முன் வந்தது. அதன்படி குன்னத்தூர் சத்திரத்தில் 191 கடைகள் கட்டப்பட்டு, அதில் 169 கடைகள் புதுமண்டபத்தில் இருந்த கடைக்காரர்களுக்கு கொடுக்கப்பட்டது. 
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடைகளை திறந்து வைத்த பிறகு புதுமண்டபத்தில் உள்ள கடைகளை காலி செய்யுமாறு கோவில் நிர்வாகம் கூறியது. ஆனால் குன்னத்தூர் சத்திரத்தில் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி மற்றும் மின்சார வாரியம் சார்பில் மின்வசதி செய்து தரப்படவில்லை.
எனவே கடைகளை காலி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் குன்னத்தூர் சத்திரத்தில் 14 கடைகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டதாகவும், புதுமண்டபத்தில் உள்ள அதற்குரிய கடைகளை உடனே காலி செய்ய கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால் கடைக்காரர்கள் குன்னத்தூர் சத்திரத்தில் மின்வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த பிறகு கடைகளை காலி செய்வதாக தெரிவித்தனர்.

14 கடைகள் அகற்றம்

அதை தொடர்ந்து நேற்று காலை கோவில் நிர்வாகம், போலீசார் துணையுடன் குன்னத்தூர் சத்திரத்தில் ஒதுக்கப்பட்ட அந்த 14 கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை தலைமையில் கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் புதுமண்டபத்தில் உள்ள அந்த 14 கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட முயன்றனர். இதை அறிந்த அந்த கடைக்காரர்கள் தாங்களே கடைகளை அகற்றி கொள்வதாக தெரிவித்தனர். 
ஆனால் எங்களுக்கு தேவயைான மின்வசதியை உடனே செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேற்று மாலைக்குள் மின்வசதி செய்து கொடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் உரிமையாளர் வராத ஒரு கடையை மட்டும் கோவில் பணியாளர்கள் அங்கிருந்து அகற்றினர். அப்போது அங்கிருந்த பொருட்களை எடுத்து சித்திரை வீதியில் வைக்கப்பட்டது. புதுமண்டப கடைகளை இடமாற்றம் செய்வதற்கு ஒரு சில கடைக்காரர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story