போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததாக விநாயகர் கோவில் இடிப்பு
போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததாக விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அயன்பேரையூர் கிராமத்தில் சாலையோரத்தில் விநாயகர் கோவில் கட்டப்பட்டிருந்தது. இந்த கோவில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு உள்ளது என்றும், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது என்றும், எனவே இதனை அகற்ற வேண்டும் என்றும் கூறி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் அறங்காவலர் பெரியசாமிக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த கோவிலை இடிக்க தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள கோவிலை இடிக்க தடை விதிக்க முடியாது. மேலும் 15 நாட்களுக்குள் கோவிலை இடிக்க வேண்டும், என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை தொடர்ந்து நேற்று கோவிலை இடிப்பதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறையினா் வந்தனா். அதிவிரைவு படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
மேலும் நேற்று காலை முதலே நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் கோவில் முன் திரண்டு கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள். அவர்களை அங்கிருந்து போலீசார் வெளியேற செய்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கோவில் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. கோவிலை இடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story