தேர்தல் முன்விரோதத்தில் வக்கீல் குத்திக்கொலை
தேர்தல் முன்விரோதத்தில் வக்கீல் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
உடையார்பாளையம்:
வக்கீல்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 36). வக்கீல். இந்நிலையில் தற்போது நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதே தெருவில் வசிக்கும் இலக்கியபிரபு என்பவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக அறிவழகன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இதற்கு அறிவழகனின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்தநிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
குத்திக்கொலை
இந்நிலையில் நேற்று காலை அறிவழகன் தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல், அறிவழகனை கத்தியால் குத்தியது.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அறிவழகனை காப்பாற்ற முயன்றபோது, அந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை காட்டி, பொதுமக்களை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அறிவழகன் துடிதுடித்து உயிரிழந்தார்.
சாலை மறியல்
இதையடுத்து அறிவழகனின் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள், பொதுமக்கள் ஆகியோர் திரண்டு, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, உடையார்பாளையம் புறவழிச்சாலையில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே தடுப்புக் கட்டைகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
தேர்தல் முன்விரோதம்
இதையடுத்து போலீசார், அறிவழகனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் தேர்தல் முன்விரோதத்தில் அறிவழகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம், என்பது தெரியவந்தது.
மேலும் இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி வழக்குப்பதிந்து, இந்த சம்பவம் தொடர்பாக உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் செந்தில்குமார்(35) என்பவரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
தேர்தல் முன்விரோதத்தில் வக்கீல் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story