நாட்டு வைத்தியர் மீது பொய் புகார் அளித்ததாக கூறி திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை
நாட்டு வைத்தியர் மீது பொய் புகார் அளித்ததாக கூறி, திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
தற்கொலை
திருவள்ளூரை அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 45). இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், ஹேமமாலினி (22) என்ற மகளும் உள்ளனர். ஹேமமாலினி திருவள்ளூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.
ஹேமமாலினிக்கு நாகதோஷம் உள்ளதாக கூறி அவரை அமாவாசை மற்றும் பவுர்ணமி தினத்தில், பூஜை செய்தால் தோஷம் தீரும் என அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறினார்கள். இதை தொடர்ந்து அவரை திருவள்ளூரை அடுத்த வெள்ளாத்துக்கோட்டையில் ஆசிரமம் நடத்தி வந்த நாட்டு வைத்தியர் முனுசாமி என்பவரிடம் அழைத்து சென்றனர். ஆசிரமத்தில் தங்கி இருந்த ஹேமமாலினி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புகார் மனு
இது குறித்து மாணவியின் பெற்றோர், பென்னலூர்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஹேமமாலினியின் தந்தை ராமகிருஷ்ணன், தாயார் நிர்மலா மற்றும் உறவினர்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் ஹேமமாலினியின் சாவுக்கு காரணமான நாட்டு வைத்தியர் முனுசாமி மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்.
முற்றுகை
இந்நிலையில் நேற்று வெள்ளாத்துக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அவர்கள் நாட்டு வைத்தியர் முனுசாமி ஏழை எளிய மக்களுக்கு நல்ல முறையில் மருத்துவம் பார்த்து வருகிறார். அவர் மூலம் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று நல்ல முறையில் நாங்கள் குணமாகி உள்ளோம்.
எந்த தவறும் செய்யாத நாட்டு வைத்தியர் முனுசாமி மீது ஹேமமாலினியின் உறவினர்கள் பொய் புகார் கொடுத்து உள்ளனர். எனவே பொய் புகார் கொடுத்தவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். பின்னர், அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமாரிடம் அளித்தனர். அதன்பின்னர், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story