போதை பொருள் கடத்தலில் கைதான 8 பேர் ஜெயிலில் அடைப்பு


போதை பொருள் கடத்தலில் கைதான 8 பேர் ஜெயிலில் அடைப்பு
x
தினத்தந்தி 22 Feb 2022 9:15 PM IST (Updated: 22 Feb 2022 9:15 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் போதை பொருள் கடத்தலில் கைதான 8 பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட 8 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
போதை பொருள்
தூத்துக்குடி அருகே உள்ள வேம்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த படகில் சிலர் புறப்பட்டனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து படகை நிறுத்தினர். அந்த படகில் சோதனை செய்த போது, 10 கிலோ கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் என்ற போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.30 கோடி என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீசார் போதை பொருள் கடத்தியதாக கீழவைப்பார் தெற்கு தெருவை சேர்ந்த இருதயவாஸ் (வயது 43), கடற்கரை தெருவை சேர்ந்த கிங்பன் (25), வினிஸ்டன் (24), சிங்கார காலனியை சேர்ந்த சிலுவை (44), சுபாஷ் (26), சுனாமி காலனியை சேர்ந்த கபிலன் (21), சிப்பிக்குளம் மீனவர் காலனியை சேர்ந்த அஸ்வின் (27), வடக்கு தெருவை சேர்ந்த சைமன் என்ற சுக்கு (30) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.
ஜெயிலில் அடைப்பு
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இவர்களின் செல்போன்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையை சேர்ந்தவர்களிடம் தொடர்பு கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 
அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் போதை பொருளை தூத்துக்குடி மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட 8 பேரையும் விளாத்திகுளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.

Next Story