கழுகுமலையில் பா.ஜனதாவினர் சாலை மறியல்


கழுகுமலையில் பா.ஜனதாவினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Feb 2022 9:20 PM IST (Updated: 22 Feb 2022 9:20 PM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் பா. ஜனதாவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கழுகுமலை:
கழுகுமலை பேரூராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 1-வது வார்டில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி பா.ஜனதா கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். மேலும், பரபரப்பு ஏற்பட்டது. மாலையில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
மறுவாக்கு எண்ணிக்கை
கழுகுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளின் வாக்கு எண்ணிக்கை நேற்று காலையில் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்தது.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இதில் முதலாவது வார்டு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க. வேட்பாளர் 212 வாக்குகளும், பா.ஜனதா வேட்பாளர் 206 வாக்குகளும் பெற்றதாகவும், தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சாலை மறியல்
இதை ஏற்க மறுத்து பா.ஜனதா கட்சியினர் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் கோஷம் எழுப்பினர். அவர்கள் 1-வது வார்டுக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் சங்கரன்கோவில் மேல கேட் பகுதியில் பா.ஜனதாவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த பகுதிக்கு தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேம் ஆனந்த், கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, கோவில்பட்டி மேற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மாவதி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அ.தி.மு.க.வினர் போராட்டம்
இந்த நிலையில் கழுகுமலை பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியதை தொடர்ந்து, அக்கட்சியினர் அண்ணா புதுத்தெரு பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதை மீறி செயல்படும் தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் அ.தி.மு.க.வினர் முறையிட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். ஆனால் தி.மு.க.வினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் மாலை 5 மணியளவில் சங்கரன்கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 10 அ.தி.மு.க.வினரை கைது செய்தனர். கழுகுமலையில் பா.ஜனதாவினரும், அ.தி.மு.க.வினரும் மாறி மாறி மறியலில் ஈடுபட்டதால் நேற்று கழுகுமலையில் பரபரப்பாக காணப்பட்டது.
இரண்டு கட்சியினரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story