தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா பெருகமணி பழையூர் கிராமத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தை உரசி கொண்டு வளரும் தேக்குமரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை உரசி கொண்டு இருந்த தேக்குமரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
பொதுமக்கள், திருச்சி.
தகனமேடை அமைக்க வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூர் கிழக்கு காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கான சுடுகாட்டில் தகனமேடை இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை வெள்ளாற்றின் கரையோரத்தில் எரியூட்டுகின்றனர். இதனால் மழைக்காலங்களில் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தகனமேடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
பழுதடைந்த மின் மோட்டார் அறை
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், கோபாலப்பட்டிணம் கிராமம் அவுலியா நகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், அதன் அருகே மின் மோட்டார் இயங்கும் அறை கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் பழுதடைந்து எந்த நேரமும் இடிந்து கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், புதுக்கோட்டை.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு கிளை நூலகம், 108 ஆம்புலன்ஸ் அலுவலகம் உள்ள இடத்திற்கு பின்புறம் வெள்ளியணை ஊராட்சியின் மூலம் சேகரிக்கப் படும் குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. மேலும் அந்த குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள், பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ் அலுவலர்கள் என பல்வேறு தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலமுருகன், கரூர்.
மங்களம் அருவியில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பச்சமலையில் உள்ளது மங்களம் அருவி. இப்பகுதியில் ஒரு முறை மழை பெய்து நின்று விட்டால் தொடர்ந்து 90 நாட்களுக்கு மேல் தண்ணீர் வரும். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். இந்தநிலையில் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பாக குளிப்பதற்கு பாதுகாப்பு கம்பிகள் பொருத்தப்படவில்லை. மேலும், குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மங்களம் அருவியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சரவணன் நடேசன், திருச்சி.
ஆபத்தான சாக்கடை கால்வாய்
திருச்சி மாவட்டம், மேலப்புதூரிலிருந்து ஒத்தக்கடை செல்லும் சாலையில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியின் முகப்பு வாயிலில் மின்கம்பத்தை ஒட்டி செல்லும் சாக்கடை கால்வாய் வளைவாக மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் சில நேரங்களில் பள்ளிச்செல்லும் மாணவர்கள், சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி விழும் நிலையில் படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த இடத்தில் தடுப்பு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்டீவன்சன், திருச்சி.
Related Tags :
Next Story