பரங்கிப்பேட்டை பேரூராட்சி 4-வது வார்டுக்கு மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி பா.ஜ.க.வினர் சாலைமறியல்
பரங்கிப்பேட்டை பேரூராட்சி 4-வது வார்டுக்கு மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி பா.ஜ.க.வினர் சாலைமறியல் ஈடுபட்டனா்.
புவனகிரி,
பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கான தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அந்த வாக்கு எண்ணும் மையத்தை திறந்து வார்டு வாரியாக வாக்குகளை எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதில் 4-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் செழியன் 289 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அவருக்கு அடுத்தப்படியாக பா.ஜ.க. வேட்பாளர் தாமரை முருகன் 272 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இந்த நிலையில் 4-வது வார்டுக்கான வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்கனவே சீல் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது.
எனவே மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கோரி பா.ஜ.க. வேட்பாளர் தாமரைமுருகன் தலைமையில் அக்கட்சியினர் அங்குள்ள விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவே அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் அதனை ஏற்காமல் தொடர்ந்து பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story