மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; பால் வேன் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; பால் வேன் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 23 Feb 2022 12:49 AM IST (Updated: 23 Feb 2022 12:49 AM IST)
t-max-icont-min-icon

தோகைமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அந்த வழியாக வந்த பால் வேன் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.

தோகைமலை, 
விபத்து 
கரூர் மாவட்டம், தோகைமலையை அடுத்த போத்துராவுத்தன்பட்டி அருகே உள்ள பாப்பாகாப்பட்டி அர்ஜுன காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் தியாகராஜன்(வயது 32). இவர் திருச்சி ரெயில்வே சந்திப்பு நிலையத்தில் டீ விற்பனையாளராக  பணியாற்றி வந்தார்.  இவர் தனது மோட்டார் சைக்கிளில் போத்துராவுத்தன்பட்டி-பஞ்சப்பட்டி சாலையில் போத்துராவுத்தன்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்று கொண்டு இருந்தார். 
அப்போது எதிரே கிருஷ்ணராயபுரம் தாலுகா வீரியம்பாளையம் கிராமம் கன்னமுத்தம்பட்டியை சேர்ந்த சின்னப்பன் மகன் ரஞ்சித் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 
வாலிபர் பலி 
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தியாகராஜன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த நிலையில், அந்த வழியாக முசிறி தாலுகா அய்யம்பாளையம் கிராமம் ஏபூரை சேர்ந்த ராமதாஸ் மகன் சக்தி என்பவர் ஓட்டி வந்த பால் வேன் எதிர்பாராத விதமாக தியாகராஜனின் தலையில் ஏறியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து உடனே தோகைமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தியாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் படுகாயம் அடைந்த ரஞ்சித்தை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்  வழக்குப்பதிவு செய்து பால் வேன் டிரைவர் சக்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story