நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்


நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 Feb 2022 12:50 AM IST (Updated: 23 Feb 2022 12:50 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற கூட்டத்தில் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியை நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி, பிப்.23-
சட்டமன்ற கூட்டத்தில் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியை நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கருப்பு தினம்
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் 90 சதவீத இடங்களை தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று மகத்தான சக்தியாக மாறியுள்ளது. இந்த வெற்றி மேலும் தொடர வேண்டும். கூட்டணி பலமாக இருந்து தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
புதுவை கவர்னர் பதவியேற்று ஒருஆண்டு நிறைவு செய்துள்ள வேளையில் மாநில அரசியலில் பிப்ரவரி 22-ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டிய நாள் ஆகும். கடந்த ஆண்டு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மற்றும் சபாநாயகரை மிரட்டி பணிய வைத்து பா.ஜ.க.வினர் தங்கள் கட்சியில் இணைத்து கொண்ட கருப்பு தினம்.
நிரந்தர கவர்னராக...
கவர்னர் ஓராண்டு காலம் நிறைவு செய்து கவர்னர் மாளிகையில் ஒரு விழா நடத்தியுள்ளார். அவர் புதுவைக்கு பொறுப்பு கவர்னர் தான். ஆனால் நிரந்தர கவர்னராக மாறி விட்டார். தெலுங்கானாவை மறந்து விட்டார்.
கவர்னர் ஏன் முயற்சி எடுத்து புதுவை மாநில வளர்ச்சிக்கு நிதியை பெற்று தரவில்லை. 9 மாதத்தில் முதல்-அமைச்சர் டெல்லி சென்று பிரதமர், மத்திய உள்துறை மந்திரியை சந்திக்கவில்லை. காரைக்கால், மாகி, ஏனாம் கூட செல்லவில்லை. புதுவை மட்டுமே மாநிலம் என்று நினைக்கிறார்.
வெள்ளை அறிக்கை
எங்கள் ஆட்சி காலத்தில் ஒதுக்கிய நிதியில் 95 சதவீதம் செலவு செய்தோம். 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் முதல்-அமைச்சர் அறித்தது ரூ.9,900 கோடி. அதில் செலவு செய்தது 40 சதவீதம் மட்டும் தான். இன்னும் 40 நாட்களில் 100 சதவீத இலக்கை எப்படி எட்ட முடியும். 
முதல்-அமைச்சர் இன்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் புதுவை நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story