முதல் தேர்தலை சந்தித்த சிவகாசி மாநகராட்சியையும் தி.மு.க. தன்வசமாக்கியது
பொன் விழா ஆண்டில் மதுரை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. முதல் தேர்தலை சந்தித்த சிவகாசி மாநகராட்சியையும் தன்வசமாக்கியது.
சிவகாசி , பிப்.23-
பொன் விழா ஆண்டில் மதுரை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. முதல் தேர்தலை சந்தித்த சிவகாசி மாநகராட்சியையும் தன்வசமாக்கியது.
3-வது பெரிய மாநகரம்
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்து மக்கள் தொகையில் மதுரை 3-வது பெரிய மாநகரம் ஆகும். இந்த மாநகராட்சி, மொத்தம் 100 வார்டுகளைக் கொண்டு உள்ளது.
மதுரை மாநகராட்சி, கடந்த 1971-ம் ஆண்டு மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த மாநகராட்சி வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என 4 மண்டலங்களைக் கொண்டு உள்ளது. மதுரை மாநகராட்சி, தமிழக வரி வசூல் வருவாயிலும் 3-வது இடத்தைப் பெற்றுள்ளது.
தி.மு.க. 67 வார்டுகளில் வெற்றி
இத்தகைய பெருமை வாய்ந்த மதுரை நகரானது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, 50-வது ஆண்டு பொன் விழாவை கொண்டாடி வருகிறது. எனவே மதுரை நகர் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக விளங்கும் இந்த ஆண்டில் மாநகராட்சி நிர்வாகத்தை எந்த கட்சி தேர்தலின் மூலம் கைப்பற்றப் போகிறது என்ற எதி்ர்பார்ப்பு நீடித்து வந்தது. அதற்கு விடை நேற்று கிடைத்தது.
கடந்த 19-ந் தேதி நடந்த தேர்தலில் மதுரை மாநகரில் பதிவான வாக்குகள் மதுரையில் உள்ள 4 மையங்களில் எண்ணப்பட்டன. காலையில் இருந்தே முடிவுகள் வெளிவர தொடங்கின. ஆரம்பத்தில் இருந்தே பலத்த போட்டி எதுவுமின்றி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அ.தி.மு.க. குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற்றன.
100 வார்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று மாலை வரை நீடித்தது. மொத்தம் உள்ள 100 வார்டுகளில் கட்சிகள் பெற்ற வெற்றி விவரம் வருமாறு:-
தி.மு.க.-67
அ.தி.மு.க.-15
காங்கிரஸ்-5
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-4
ம.தி.மு.க.-3
வி.சி.க.-1
பா.ஜ.க.-1
சுயேச்சை-4
சிவகாசி மாநகராட்சி
சிவகாசி, திருத்தங்கல், ஆகிய 2 நகராட்சிகளையும் இணைத்து தமிழகத்தின் 21-வது மாநகராட்சியாக சிவகாசி மாநகராட்சி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உருவாக்கப்பட்டது. பட்டாசு, தீப்பெட்டி, அச்சக தொழில்களுக்கு புகழ் பெற்றது சிவகாசி நகரம்.
இந்த மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். சிவகாசி மாநகராட்சி உருவாக்கப்பட்டதில் இருந்து முதல் உள்ளாட்சித்தேர்தலை தற்போது சந்தித்து உள்ளது.
இந்த தேர்தலில் 250-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் இறங்கினர். இதில் 32 வார்டுகளில் தி.மு.க.- அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் நேரடியாக போட்டியிட்டன. நேற்றைய தேர்தல் முடிவுகளின்படி இந்த மாநகராட்சியையும் தி.மு.க.வே ஆதிக்கம் செலுத்தி, அதை தன்வசப்படுத்தி உள்ளது.
மொத்தம் உள்ள 48 வார்டுகளில் கட்சிகள் பிடித்த வார்டு விவரம் வருமாறு:-
தி.மு.க.-24
அ.தி.மு.க.-11
காங்கிரஸ்-6
ம.தி.மு.க.-1
வி.சி.க.-1
பா.ஜ.க.-1
சுயேச்சை-4
Related Tags :
Next Story