நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. இதனால் உற்சாகம் அடைந்த தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டனர்.
நெல்லை மாநகராட்சி
பிரசாரம் ஓய்ந்ததை தொடர்ந்து நெல்லை மாநகராட்சியில் கடந்த 19-ந் தேதி நகா்ப்புற உள்ளாட்சி ேதர்தல் நடந்தது. மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கு 408 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 2,20,899 வாக்குகள் பதிவானது. இது 52.45 சதவீதம் ஆகும்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து வாக்கு எண்ணும் மையமான நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
வாக்கு எண்ணிக்கை
இந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டது. இதற்காக அங்கு 16 மேஜைகள் போடப்பட்டு இருந்தன. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ஒவ்வொரு வார்டுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டது.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் கம்பிவேலி தடுப்புக்கு வெளியே நின்று தங்களது வேட்பாளர்கள் முன்னணி நிலவரம் குறித்து அறிந்தனர். இதனால் வாக்குப்பதிவு காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
தி.மு.க. கைப்பற்றியது
தொடா்ந்து ஒவ்வொரு வார்டுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் ஆளும்கட்சியான தி.மு.க. 44 வார்டுகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.
எதிர்க்கட்சியான அ.தி.மு.க. 4 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சி 3 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேச்சை தலா 1 வார்டுகளில் வெற்றி பெற்றது.
தூத்துக்குடி
இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் மொத்தம் 1,92,964 வாக்குகள் பதிவானது. அதாவது, 59 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த மாநகராட்சியில் பதிவான ஓட்டுகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடி வ.உ.சி. அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தது.
அங்கு நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதல் பல்வேறு வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மாலையில் பல்வேறு வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான வார்டுகளில் தி.மு.க.வினர் வெற்றி வாகை சூடினார்கள். அதாவது 60 வார்டுகளில் 44 வார்டுகளில் தி.மு.க.வினர் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றினார்கள். மேலும் அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தலா ஒரு வார்டுகளிலும், சுயேச்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்று உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியதால் பல்வேறு இடங்களில் அந்த கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story