தொழிலாளியை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்


தொழிலாளியை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 23 Feb 2022 3:09 AM IST (Updated: 23 Feb 2022 3:09 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நத்தவெளி கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் காசிநாதன் மகன் சவுந்தர்ராஜன்(வயது 30). மரம் வெட்டும் தொழிலாளியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரம் வெட்டும் வேலைக்காக சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. காசிநாதன் மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை சுத்தமல்லி பெரிய ஓடை அருகே வேப்பமரத்தில் சவுந்தரராஜன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் சவுந்தரராஜனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி காசிநாதன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எப்படி சவுந்தரராஜன் இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை நத்தவெளி கிராமத்தைச் சேர்ந்த சவுந்தரராஜனின் உறவினர்கள் ஒன்றுகூடி தா.பழூர்- விளாங்குடி சாலையில் சுந்தரேசபுரத்தில் நின்று சவுந்தரராஜன் கொலை செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி, சவுந்தரராஜனின் உறவினர்களிடம் விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததன்பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தா.பழூர்- விளாங்குடி சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story