விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் வேட்பாளர் தர்ணா
மாநகராட்சி கமிஷனர் கார் முன்பு அமர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் வேட்பாளர் தர்ணா போராட்டம் நடத்தினார். தேர்தல் முடிவை தன்னிச்சையாக அறிவித்ததாக புகார் தெரிவித்தார்
மதுரை,
மதுரை மாநகராட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. இதில் 30-வது வார்டு தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. எனவே அந்த கட்சி சார்பில் மோகனா நிறுத்தப்பட்டார். மேலும் அ.தி.மு.க. சார்பில் வசந்தா தேவி உள்ளிட்ட 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்த வார்டில் 15 ஆயிரத்து 260 மொத்த வாக்குகளில் 7 ஆயிரத்து 491 வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை மதுரை வக்பு வாரிய கல்லூரியில் நடந்தது. இதில் முதல் சுற்று, 2-ம் சுற்றுக்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், அ.தி.மு.க.வும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தன. முடிவில் மோகனா 2 ஆயிரத்து 344 வாக்குகளும், வசந்தா தேவி 2 ஆயிரத்து 366 வாக்குகள் பெற்றனர். இதில் 22 வாக்கு வித்தியாசத்தில் வசந்தா தேவி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இதற்கிடையில் தேர்தல் அதிகாரி தன்னிச்சையாக செயல்பட்டு அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்ததாக மோகனா புகார் தெரிவித்தார். மேலும் அவர் அங்கு ஆய்வுக்கு வந்த மாநகராட்சி கமிஷனர் கார் முன்பு அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் தனது வார்டில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும், அதுவரை இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று கூறினார். மேலும் நேரம் செல்ல செல்ல அவருக்கு ஆதரவாக அவரது கட்சி நிர்வாகிகள் அங்கு வந்து அவர்களும் வழியில் அமர்ந்து தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் தர்ணா செய்த பெண் வேட்பாளர் மோகனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதை தொடர்ந்து அவர் உள்பட 5 பேரை தேர்தல் உயர்அதிகாரியை சந்தித்து தங்களின் கோரிக்கை குறித்து தெரிவிக்குமாறு கூறினார்கள். அதை தொடர்ந்து அவர்கள் அதிகாரியை சந்தித்து தங்களின் நிலை குறித்து தெரிவித்தனர். அப்போது வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்த அதிகாரிகள் சம்பவம் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. aஎனவே தங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேமராவை ஆய்வு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் வக்பு வாரியகல்லூரி மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story