தேசிய குடோ விளையாட்டு போட்டி: தூத்துக்குடி மாணவர்கள் சாதனை


தேசிய குடோ விளையாட்டு போட்டி: தூத்துக்குடி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 23 Feb 2022 8:12 PM IST (Updated: 23 Feb 2022 8:12 PM IST)
t-max-icont-min-icon

தேசிய அளவிலான குடோ விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள தூத்துக்குடி மாணவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்

தூத்துக்குடி:
தேசிய அளவிலான குடோ விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள தூத்துக்குடி மாணவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.
குடோ விளையாட்டு போட்டி
தேசிய அளவிலான குடோ விளையாட்டு போட்டி கடந்த 14.2.2022 முதல் 20.2.2022-ந் தேதி வரை இமாச்சலபிரதேச மாநிலம் சோலார் மாவட்டத்தில் நடந்தது. இந்த போட்டியில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு சார்பில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற தூத்துக்குடியை சேர்ந்த மாணவர்கள் எமில் சாலமோன், அஜித் குமார் ஆகியோர் தேசிய அளவிலான போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 5 மாணவர்கள் அடுத்து நடைபெற உள்ள சர்வதேச அளவிலான போட்டியான அக்சய்குமார் டிராபி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர்.
பாராட்டு
தேசிய அளவிலான குடோ விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் நேற்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர் தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை பெற வாழ்த்தி பாராட்டுக்களை தெரிவித்தார். அப்போது, தூத்துக்குடி மாவட்ட குடோ சங்க தலைவர் இசக்கிராஜா, செயலாளர் ஸ்டீபன், பொருளாளர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story