லாரி கவிழ்ந்து மீட்பு வாகன டிரைவர் பலி


லாரி கவிழ்ந்து மீட்பு வாகன டிரைவர் பலி
x
தினத்தந்தி 23 Feb 2022 8:56 PM IST (Updated: 23 Feb 2022 8:56 PM IST)
t-max-icont-min-icon

நடுவட்டம் அருகே பள்ளத்தில் சிக்கியதை மீட்டபோது லாரி கவிழ்ந்து மீட்பு வாகன டிரைவர் பலியானார். இதில் படுகாயம் அடைந்தவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கூடலூர்

நடுவட்டம் அருகே பள்ளத்தில் சிக்கியதை மீட்டபோது லாரி கவிழ்ந்து மீட்பு வாகன டிரைவர் பலியானார். இதில் படுகாயம் அடைந்தவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சாலையோரம் சிக்கிய லாரி

கோவையில் இருந்து இரும்புக் கம்பிகள் ஏற்றி கொண்டு ஒரு லாரி கூடலூர் நோக்கி வந்தது. லாரியை கடலூரைச் சேர்ந்த அப்துல் ரசாக் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது நடுவட்டம் அருகே டி.ஆர்.பஜார் பகுதியில் வந்த போது திடீரென சாலையோர பள்ளத்தில் சிக்கி சரக்கு லாரி ஒரு பக்கமாக சரிந்து நின்றது.

இதையடுத்து ஊட்டியை சேர்ந்த மொயின் சித்திக் (வயது 46), ரூபன் (24) ஆகியோர் தனது மீட்பு வாகனத்தில் அப்பகுதிக்கு வந்தார். பின்னர் சாலையோரத்தில் சிக்கி இருந்த லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரி மீது மொயின் சித்திக் ஏறி நின்றார். 

டிரைவர் பலி

அப்போது திடீரென சரக்கு லாரி கவிழ்ந்தது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியின் அடியில் மொயின் சித்திக், ரூபன் ஆகியோர் சிக்கினார். இதில் மொயின் சித்திக் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

அதுபோன்று ரூபன் (24) பலத்த காயம் அடைந்தார். இது குறித்து தகவலறிந்த நடுவட்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ரூபனை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து நடுவட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story