மங்கலம் அருகே நூல் மில்லில் தீ
மங்கலம் அருகே நூல் மில்லில் தீ
மங்கலம்,
மங்கலம் அருகே நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் மற்றும் எந்திரங்கள் எரிந்து சேதமானது.
இந்த தீ விபத்து பற்றி கூறப்படுவதாவது:-
தீப்பிடித்தது
திருப்பூர் மங்கலத்தை அடுத்த இச்சிப்பட்டியில் வேலுச்சாமி (வயது 62) என்பவருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது. இங்கு நேற்று மதியம் 12 மணியளவில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக மில் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து மங்கலம் போலீசாருக்கும், பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார்.
ரூ.1¼ கோடி பொருட்கள் எரிந்து சேதம்
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மங்கலம் போலீசார் மற்றும் பல்லடம் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. பின்னர் சூலூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கிருந்து வந்த தீயணைப்பு வீரர்களும், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள், எந்திரங்கள் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story