கர்நாடகாவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 511 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது
கர்நாடகாவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 511 கிலோ புகையிலை பொருட்களை தர்மபுரி அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி:
கர்நாடகாவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 511 கிலோ புகையிலை பொருட்களை தர்மபுரி அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
கர்நாடக மாநிலத்தில் இருந்து புகையிலைபொருட்கள் கடத்தப்படுவதாக தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனுக்கு தகவல் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், மதிகோன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்மாதுரை மற்றும் போலீசார் குண்டல்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது பின்புற இருக்கைகள் கழற்றப்பட்டு இருந்தன. இதனால் சந்தேகமடைந்த போலீசார் காருக்குள் சோதனையிட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட 511 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள், மூட்டைகள் மற்றும் அட்டை பெட்டிகளில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
2 பேர் கைது
இதுதொடர்பாக அந்த காரில் வந்த கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த விவேக் (வயது30), ஸ்ரீதர் (25) ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து அவிநாசிக்கு புகையிலை பொருட்களை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் ரூ.8 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த புகையிலை பொருட்கள் கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story