ஓராண்டாகியும் கரும்புக்கான ஊக்கத்தொகை ரூ.6 கோடியை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை


ஓராண்டாகியும் கரும்புக்கான ஊக்கத்தொகை ரூ.6 கோடியை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை
x
தினத்தந்தி 23 Feb 2022 10:28 PM IST (Updated: 23 Feb 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

ஓராண்டாகியும் கரும்புக்கான ஊக்கத்தொகை ரூ.6¼ கோடியை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை என்று கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் கலிவரதன் தலைமையில் விவசாயிகள் நாகராஜ், செல்வராஜ், ஜெயகோபி, ராமச்சந்திரன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு விவசாயிகள் 2020-21-ம் ஆண்டிற்கு அனுப்பிய கரும்புக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத்தொகை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்காமல் உள்ளது.

ரூ.6¼ கோடி ஊக்கத்தொகை

இவ்வாறாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.6 கோடியே 70 லட்சத்தை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க ஆலை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஓராண்டாகியும் பணம் கிடைக்காமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதனையே நம்பியுள்ள விவசாய கூலித்தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் தற்போது கரும்பு பயிர்களில் அமெரிக்கன் படைப்புழுவின் தாக்குதலால் விவசாயிகள், மருந்து அடிப்பதற்குக்கூட பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே மேற்கொண்டு கரும்பு பயிர்களை காப்பாற்றுவதற்கும், லட்சக்கணக்கான விவசாய தொழிலாளர்களை காப்பாற்றுவதற்கும் இந்த பணம் உடனே கிடைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும். ஆகவே மாவட்ட கலெக்டர், இதில் தலையிட்டு கரும்பு பணம் கிடைக்க உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உரிய பணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.  மனுவை பெற்ற கலெக்டர் மோகன், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story