டேங்கர் லாரியை வழிமறித்து பொதுமக்கள் போராட்டம்


டேங்கர் லாரியை வழிமறித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2022 10:29 PM IST (Updated: 23 Feb 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே, நிலத்தடி நீரை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து டேங்கர் லாரியை வழிமறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி:
சீர்காழி அருகே, நிலத்தடி நீரை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து டேங்கர் லாரியை வழிமறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை விரிவாக்கப்பணி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூர் முதல் கருவி வரை புறவழிச்சாலையில் நான்குவழி சாலை அமைப்பதற்கு சாலை விரிவாக்க பணி ஒரு தனியார் நிறுவனம் மூலம் நடந்து வருகிறது. இதனால் அந்த நிறுவனம் சாலை அமைப்பதற்கான பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்  அமைத்து அதில் இருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்து டேங்கர் லாரி மூலம் கொண்டு சென்று பயன்படுத்தி  வருகிறது. 
இந்தநிலையில் நிலத்தடி நீரை  எடுத்து சாலை விரிவாக்க பணிக்கு பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நேற்று காலை பாதரக்குடி புறவழிச்சாலை அருகே சாலை பணிக்காக தண்ணீர் எடுத்து வந்த டேங்கர் லாரியை பொதுமக்கள் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷங்கள் எழுப்பினர்
போராட்டத்தின்போது சாலை விரிவாக்க பணிக்காக நிலத்தடிநீர் எடுக்கப்பட்டால் எதிர்காலத்தில் தங்களுக்கு குடிநீர் பாதிப்பு ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும். எனவே இந்த பகுதியில் தண்ணீர் எடுக்கக் கூடாது. மேலும் சாலை அமைப்பதற்காக பட்டா நிலத்தில் உள்ள பனை மரங்களை உரியவர்கள் அனுமதியின்றி வெட்டக் கூடாது. 
சாலை அமைப்பதற்காக சாலையோரம் உள்ள பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால் சட்டவிரோதமாக மூடப்பட்டுள்ளது. இதனை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் சண்முகம், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டார். 
அப்போது அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் காமராஜ், கணேசன், தங்கராஜ் ஆகியோர் தாசில்தாரிடம் சாலை அமைக்கும் தனியார் கம்பெனி நிலத்தடி நீரை எடுக்கக் கூடாது. மூடப்பட்ட பாசனம் மட்டும் வடிகால் வாய்க்காலை உடனே தூர்வார வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், கிராம மக்கள் சார்பில் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றனர்.
தீர்வு காணப்படும்
இதனைத் தொடர்ந்து தாசில்தார் சண்முகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு  அனைவரும் கலைந்து சென்றனர். 
இதுதொடர்பாக அடுத்த வாரத்தில் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் பாதரக்குடி பொதுமக்கள் மற்றும் சாலை அமைக்கும் நிறுவனம் சார்பில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் என்றார். 
அப்போது கிராம நிர்வாக அலுவலர் விக்டர் விண்ணரசு உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story