வேப்பூர் அருகே பஸ்-மொபட் மோதல்; 3 பேர் பலி
வேப்பூர் அருகே பஸ்-மொபட் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
வேப்பூர்,
வேப்பூர் அருகே உள்ள மருதத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகன் கருப்புசாமி(வயது 45). விவசாயி. இவர் நேற்று மதியம் தனது மனைவி செல்வராணி(37), உறவினர் ஆறுமுகம்(45), பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்த வீரமுத்து மகன் விஜய்(24) ஆகியோருடன் ஒரு மொபட்டில் பூலாம்பாடிக்கு சென்று கொண்டிருந்தார்.
வேப்பூர் அடுத்த ஏ.அகரம் அருகே சென்றபோது, வேப்பூரில் இருந்து பெண்ணாடம் நோக்கி சென்ற தனியார் பஸ்சும், இவர்கள் சென்ற மொபட்டும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
3 பேர் பலி
இந்த விபத்தில் மொபட்டில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கருப்புசாமி, ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த செல்வராணி, விஜய் ஆகியோர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே விஜய் பரிதாபமாக உயிாிழந்தார். செல்வராணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சோகம்
இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான கருப்புசாமி, ஆறுமுகம் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்-மொபட் விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story