கருக்கலைப்பு செய்த பெண் திடீர் சாவு


கருக்கலைப்பு செய்த பெண் திடீர் சாவு
x
தினத்தந்தி 23 Feb 2022 10:58 PM IST (Updated: 23 Feb 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அருகே கருக்கலைப்பு செய்த பெண் திடீரென இறந்தார். இது தொடர்பாக மருந்துக்கடை உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரிஷிவந்தியம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள கீழ்ப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி. தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி (வயது 25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 
இந்த நிலையில் செல்வி மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து பரிசோதனைக்காக செல்வி சூளாங்குறிச்சி மணிமுக்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார்.  அங்கு பரிசோதனை செய்தபோது செல்வியின் வயிற்றில் இருந்த சிசுவுக்கு இருதய குறைபாடு இருப்பது தெரியவந்தது. 
இதைத்தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இருதய குறைபாடுடன் குழந்தை பிறந்தால் சிரமம் ஏற்படும். எனவே கருவை கலைக்க செல்வி முடிவு செய்துள்ளார்.

கருக்கலைப்பு

 அதன்படி ஆஸ்பத்திரியில் கருவை கலைக்குமாறு செல்வி கூறியதாக தெரிகிறது. ஆனால் கர்ப்பமாகி 5 மாதங்கள் ஆகிவிட்டதால் கருவை கலைக்க முடியாது என மருத்துவர்கள் கூறி செல்வியை அங்கிருந்து அனுப்பிவிட்டனர். இந்த நிலையில் கீழ்ப்பாடி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மருந்துக்கடையில் கருக்கலைப்பு  செய்யப்படுவதாக செல்விக்கு  தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அங்கு சென்றார்.
 அப்போது அங்கு கருக்கலைப்பு செய்தபோது, செல்விக்கு திடீரென ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு காரில் அனுப்பி வைக்கப்பட்டார். 

வலைவீச்சு

அங்கு அவரை பரிசோதனை டாக்டர்கள், செல்வி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில்  சட்டத்தை மீறி கருக்கலைப்பு செய்ததாக மருந்துக்கடை உரிமையாளர் மணிகண்டன்  மற்றும் அவரது மனைவி முத்துக்குமாரி, உதவியாளர் கவிதா ஆகியோர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.மருந்துக்கடையில் கருக்கலைப்பு செய்த பெண் திடீரென இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story