அ.தி.மு.க. கோட்டையை தகர்த்து வெற்றிக்கொடி நாட்டிய தி.மு.க.


அ.தி.மு.க. கோட்டையை தகர்த்து வெற்றிக்கொடி நாட்டிய தி.மு.க.
x
தினத்தந்தி 23 Feb 2022 11:05 PM IST (Updated: 23 Feb 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதி மற்றும் அவருடைய சொந்த ஊரில் அ.தி.மு.க. கோட்டையை தகர்த்து தி.மு.க. வெற்றிக் கொடி நாட்டியது.

தேனி: 


ஓ.பன்னீர்செல்வம் தொகுதி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. தமிழகம் முழுவதும் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.க. முன்னணி தலைவர்களின் ஊர்களில் கூட அ.தி.மு.க. தோல்வியை சந்தித்து உள்ளது. அந்த வகையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது போடி தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக ஓ.பன்னீர்செல்வம் வெற்றியை பதிவு செய்தார். மாவட்டத்தில் மற்ற 3 தொகுதிகளில் அ.தி.மு.க. தோல்வியை தழுவிய போதிலும் போடி தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை என்று அழைக்கப்பட்டது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் பெற்ற வெற்றி அந்த கோட்டையை தகர்த்து உள்ளது. போடி சட்டமன்ற தொகுதியில் போடி நகராட்சி மற்றும் பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி, பூதிப்புரம், போ.மீனாட்சிபுரம், குச்சனூர், மேலசொக்கநாதபுரம், மார்க்கையன்கோட்டை ஆகிய 7 பேரூராட்சிகள் உள்ளன. இதில் போடி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 20 வார்டுகளில் தி.மு.க.வும், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 9 இடங்களிலும், பா.ஜ.க. 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.

 போடி நகர்மன்ற தலைவராக கடந்த முறை அ.தி.மு.க.வை சேர்ந்தவர் இருந்தார். இந்த முறை நகர்மன்ற தலைவர் நாற்காலியில் தி.மு.க.வை சேர்ந்தவர் அமர இருக்கிறார்.

சொந்த ஊரில் தோல்வி
அதுபோல், குச்சனூர், பூதிப்புரம், மார்க்கையன்கோட்டை, மேலச்சொக்கநாதபுரம், வீரபாண்டி ஆகிய 5 பேரூராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. போ.மீனாட்சிபுரம் பேரூராட்சியை மட்டும் அ.தி.மு.க. கைப்பற்றியது. பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் தி.மு.க. 7 வார்டுகளிலும், அ.ம.மு.க. 6 வார்டுகளிலும் வெற்றி பெற்ற நிலையில், அ.தி.மு.க. 2 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த பேரூராட்சியில் தலைவர் பதவியை பெறப்போவது யார் என்பதில் தி.மு.க., அ.ம.மு.க. இடையே இழுபறி நிலவுகிறது.

அதுபோல், ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 12 இடங்களில் தி.மு.க., தி.மு.க. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 8 வார்டுகளை மட்டுமே கைப்பற்றியது. அ.ம.மு.க. 3 இடங்களிலும், பா.ம.க. ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றது.

ஆறுதல் வெற்றி
ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு அமைந்துள்ள 21-வது வார்டிலும் அ.தி.மு.க. வேட்பாளர் தோல்வியை தழுவினார். அந்த வார்டை தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க.வுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வெற்றி பெற்ற 8 பேரில், ஓ.பன்னீர்செல்வத்தின் இளையதம்பி ஓ.சண்முகசுந்தரமும் ஒருவர்.
தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. கோட்டையாக கருதப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளை தகர்த்து தி.மு.க. வெற்றி கொடி நாட்டியுள்ளது. இது அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.  

Next Story