ஆம்பூரில் வாக்காளர்களுக்கு போலி தங்க நாணயம் கொடுத்த சுயேச்சை பெண் வேட்பாளர் தோல்வி
ஆம்பூரில் தங்க நாணயம் எனக்கூறி வாக்காளர்களுக்கு போலி நாணயம் கொடுத்த சுயேச்சை பெண் வேட்பாளர் ேதால்வியடைந்தார்.
ஆம்பூர்
ஆம்பூரில் தங்க நாணயம் எனக்கூறி வாக்காளர்களுக்கு போலி நாணயம் கொடுத்த சுயேச்சை பெண் வேட்பாளர் ேதால்வியடைந்தார்.
5 வேட்பாளர் போட்டி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் நகரப்புற உள்ளாட்சி தேர்தல் அனைத்து வார்டுகளுக்கும் நடந்தது. இதில் 36-வது வார்டு பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டது. இந்த வார்டில் அ.தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்பட 5 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் துரைப்பாண்டி என்பவரது மனைவி மணிமேகலை சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.
அவருக்கு தென்னை மரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. மனைவிக்கு வாக்களிக்க கோரி துரைபாண்டி வீடு வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
18-ந் தேதி இரவு சுமார் 1,500 வாக்காளர்களுக்கு தங்க நாணயம் என கூறி பளபளப்பான நாணயங்களை அவர் வழங்கியதாக கூறப்படுகிறது.
போலி நாணயம்
வாக்குப் பதிவு நாளில் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்த சில வாக்காளர்கள் வாக்குப் பதிவுக்கு பிறகு தங்க நாணயத்தின் தரத்தை சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது அது போலி நாணயம் என்பது தெரிய வரவே அவர்கள் ஆத்திரம் அரடைந்தனர்.
போலி தங்க நாணயம் கொடுத்து சுயேச்சை வேட்பாளரின் கணவர் துரைபாண்டி ஏமாற்றி விட்டார் என வாக்காளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஏமாற்றமடைந்த வாக்காளர்கள் துரைபாண்டிைய தேடி அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் அங்கு இல்லை.
தோல்வி
இதுகுறித்து வேட்பாளரின் கணவர் துரைபாண்டியிடம் கேட்டபோது, சுயேச்சை வேட்பாளரான என்னுடைய மனைவிக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை சந்தித்து வேண்டினேன். ஆனால் எந்த பரிசு பொருளையும் யாருக்கும் நான் வழங்கவில்லை. என் மீது வீண் பழி சுமத்துகின்றனர் என்று கூறினார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடந்ததில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட மணிமேகலை 330 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அந்த வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தாமரைச்செல்வி 983 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
Related Tags :
Next Story