புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Feb 2022 12:57 AM IST (Updated: 24 Feb 2022 12:57 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கு
தோவாளை ஊராட்சி அலுவலகம், கிருஷ்ணசாமி கோவில் திருமண மண்டபம் அருகில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கு பழுதடைந்து பல நாட்களாக எரியாமல் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                               -எம்.வெங்கடேஷ். தோவாளை.

புதர்மண்டி கிடக்கும் தெருவிளக்கு
சுசீந்திரம் அருகே உள்ள ஆனைப்பாலம் ரெயில்வே மேம்பாலத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்து புதர் மண்டி காட்சி அளிக்கிறது. இதனால் விளக்கின் வெளிச்சம் அந்த சாலையில் தெரியாததால் அந்த பகுதியில் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                               -த.விசாகன், அனந்தபத்மநாபபுரம்.

குப்பைகளை அகற்ற வேண்டும்
அனந்தன் நகரில் இருந்து வடக்கு கோணம் செல்லும் ஆற்றங்கரை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் கடந்த சில நாட்களாக குப்பைகள் ேதங்கி காணப்படுகிறது. இதனால் தண்ணீர் சரியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                          -ஆ.ஆன்றணி சதீஷ், ஆசாரிபள்ளம்.

குளம் தூர்வாரப்படுமா?
அருமநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாஸ்தான்கோவில் பகுதியில் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது குளத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதுடன், பாசி படர்ந்து குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
                         -அருள்ஜீவா, புளியடி, அருமநல்லூர்.

பாதுகாப்பு குறியீடுகள் தேவை
நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் ஒரு தனியார் மருத்துவமனை பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து பயணிகள் சாலையை கடந்து செல்வதற்கு முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் பயணிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் எற்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதியில் பயணிகள் நலன் கருதி சாலையில் பாதுகாப்பு குறியீடுகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                 -ஜஸ்டின், வெட்டூர்ணிமடம்.

Next Story