பல்கலைக்கழகங்களுக்கு இடையே மகளிர் கபடி போட்டி


பல்கலைக்கழகங்களுக்கு இடையே மகளிர் கபடி போட்டி
x
தினத்தந்தி 24 Feb 2022 12:59 AM IST (Updated: 24 Feb 2022 12:59 AM IST)
t-max-icont-min-icon

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையே மகளிர் கபடி போட்டி தொடங்கி நடந்து வருகிறது.

காரைக்குடி
தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையே மகளிர் கபடி போட்டி தொடங்கி நடந்து வருகிறது.
கபடி போட்டி
இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பின் சார்பில் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டிகளை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்ககம் மற்றும் புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்துகிறது. 5 நாட்கள் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிகளின் தொடக்க விழா புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். கருப்பசாமி முன்னிலை வகித்தார். சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கிவைத்தார்.
இப்போட்டிகளில் தென் மண்டலத்தை சேர்ந்த தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா பல்கலைக்கழகங்களில் இருந்து 53 அணிகள் கலந்து கொள்கின்றன. 800 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இப்போட்டிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நாக்-அவுட் முறையில் நடைபெறுகிறது.
அணிகள் மோதல்
நேற்று நடைபெற்ற போட்டிகளில் பாரதிதாசன் பல்கலைக்கழக அணி 28-22 என்ற புள்ளி வித்தியாசத்தில் கர்நாடகா பல்கலைக்கழக அணியையும், ஆந்திரா பல்கலைக்கழக அணி 40-30 என்ற புள்ளி வித்தியாசத்தில் மகாராணி கிளஸ்டர் பல்கலைக்கழக அணியையும், ஆச்சாரியா நாகார்ஜுனா பல்கலைக்கழக அணி 23-9 புள்ளிகள் வித்தியாசத்தில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக அணியையும், அண்ணா பல்கலைக்கழக அணி 34- 32 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ராயல்சீமா பல்கலைக்கழக அணியையும், உஸ்மானியா பல்கலைக்கழக அணி 40-36 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் குவேம்பு பல்கலைக்கழக அணியையும், கண்ணூர் பல்கலைக்கழக அணி 46-32 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் காகத்திய பல்கலைக்கழக அணியையும் வென்றது.
முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் சேகர் வரவேற்றார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் குணசேகரன், அழகப்பா பல்கலைக்கழக உடற் கல்வி இயக்ககத்தின் இயக்குனர் செந்தில்குமரன், அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Next Story