சேலம் மாநகராட்சி தேர்தலில் 8 வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்
சேலம் மாநகராட்சி தேர்தலில் 8 வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
சேலம்,
வெற்றியும், தோல்வியும்
சேலம் மாநகராட்சி 60 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தி.மு.க. 46 வார்டுகளில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி ஒரு இடத்தில் வென்றது. மேலும் அ.தி.மு.க. 7 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த தேர்தலில் 60 வார்டுகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களில் 21-வது வார்டில் வெற்றி பெற்ற வேட்பாளரும், கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளருமான ஜி.வெங்கடாஜலத்தின் மகன் ஜனார்த்தனன் 5 ஆயிரத்து 398 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளரை 979 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதேபோல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மற்ற 6 வேட்பாளர்களும் கணிசமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தனர்.
டெபாசிட் இழந்தனர்
அதே நேரத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 8 பேர் குறைந்த வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்துள்ளனர். அதன்படி, சேலம் மாநகராட்சி 6-வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் 1,307 ஓட்டுகளும், 13-வது வார்டில் போட்டியிட்ட சீனிவாசன் 1,006 வாக்குகளும் பெற்று டெபாசிட் இழந்தனர். 14-வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பழனிசாமி 1,041 ஓட்டுகள் பெற்று டெபாசிட் இழந்தார்.
இதேபோல் அ.தி.மு.க. சார்பில் 31-வது வார்டில் போட்டியிட்ட மோகன் 912 வாக்குகளும், 32-வது வார்டில் போட்டியிட்ட யாஸ்மின்பானு 932 ஓட்டுகளும், 33-வது வார்டில் போட்டியிட்ட சரோஜா 1,284 வாக்குகளும், 42-வது வார்டில் போட்டியிட்ட சுமதி 1,061 ஓட்டுகளும், 44-வது வார்டில் போட்டியிட்ட கெஜிராமன் 973 வாக்குகளும் பெற்று டெபாசிட் இழந்தனர்.
மேலும் இந்த தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களான சூரமங்கலம் முன்னாள் மண்டலக்குழு தலைவர் தியாகராஜன், கொண்டலாம்பட்டி முன்னாள் மண்டலக்குழு தலைவர் சண்முகம் மற்றும் பகுதி செயலாளர்கள் பாலு, பாண்டியன் ஆகியோரும் தோல்வியை தழுவினர்.
3-வது இடம் பிடித்தனர்
அ.தி.மு.க. சார்பில் 4-வது வார்டில் போட்டியிட்ட சொர்ணம்மாள், 9-வது வார்டில் போட்டியிட்ட நாகராஜ், 13-வது போட்டியிட்ட சீனிவாசன், 31-வது வார்டில் போட்டியிட்ட மோகன், 33-வது வார்டில் போட்டியிட்ட சரோஜா, 44-வது வார்டில் போட்டியிட்ட கெஜிராமன், 50-வது வார்டில் போட்டியிட்ட பரமசிவம் ஆகியோர் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.
Related Tags :
Next Story