தினத்தந்தி புகாா் பெட்டி
பாெதுமக்கள் குறைகளை தொிவிக்கும் பகுதி
குப்பை தொட்டி வைக்கப்படுமா?
கோபி ஒட்டர்கரட்டுப்பாளையம் காட்டு வளவில் குப்பைகளை போட குப்பை தொட்டி இல்லை. இதனால் பெரும்பாலானோர் பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கிறார்கள். அதிலிருந்து நச்சு புகை வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மூச்சுவிட சிரமப்படுகின்றனர். மேலும் அந்த பகுதியில் தெரு விளக்கு வசதியும் இல்லை. உடனே குப்பை தொட்டி வைக்கவும், குப்பைகள் எரிப்பதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
ஆபத்தான மின்கம்பம்
நசியனூர் பெரியார் நகரில் கருப்பணசாமி கோவில் உள்ளது. இதன் எதிரில் உள்ள மின்கம்பத்தின் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இந்த வழியாகத்தான் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். பேராபத்து ஏற்படும் முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நசியனூர்.
சுகாதார நிலையம் வேண்டும்
சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்தியமங்கலத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் கர்ப்பிணிகள், முதியவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சிக்கரசம்பாளையம் பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.சசிகுமார், சிக்கரசம்பாளையம்.
கட்டிடம் கட்டப்படுமா?
பவானி வட்டம் புன்னம் ஊராட்சி தபால் நிலையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கிருந்து ஊராட்சியின் பல்வேறு இடங்களுக்கு தபால் கொண்டு செல்லப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே புன்னம் தபால் நிலையத்துக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில், பவானி
கம்பி வலை அமைக்க வேண்டும்
பவானி வட்டம் ஒரிச்சேரி கிராமம் மேற்கு காலனி பகுதியில் பொது கிணறு உள்ளது. இந்த கிணறு மூடப்படாமல் திறந்த நிலையிலேயே காணப்படுகிறது. இதன் அருகே தான் குழந்தைகள் விளையாடுகிறார்கள். அவர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்பு உடனடியாக கிணற்றுக்கு கம்பி வலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோபால், ஒரிச்சேரிபுதூர்.
கழிப்பிடம் பராமரிக்கப்படுமா?
சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மற்றும் 1-ம் வகுப்பில் 130 குழந்தைகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு பாடம் நடத்த போதுமான ஆசிரியர்கள் இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் கல்வி கற்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். மேலும் பள்ளிக்கூட கழிப்பறை பராமரிப்பின்றி காணப்படுகிறது. உடனே இப்பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியர்கள் நியமிக்கவும், கழிப்பறைகளை சுத்தம் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்.சக்திகுமார், அரசூர்.
வீணாகும் குடிநீர்
ஈரோடு வீரப்பன்சத்திரம் முனியப்பசாமி கோவில் அருகில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி ரோட்டில் ஆறு போல் செல்கிறது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், ஈரோடு.
Related Tags :
Next Story