மலை ரெயில் பாதையில் குப்பைகள் அகற்றம்
ஊட்டி-கல்லார் இடையே மலை ரெயில் பாதையில் குப்பைகள் அகற்றும் பணி நடந்தது. இதில் 360 பேர் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டி
ஊட்டி-கல்லார் இடையே மலை ரெயில் பாதையில் குப்பைகள் அகற்றும் பணி நடந்தது. இதில் 360 பேர் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
ஐகோர்ட்டு உத்தரவு
நீலகிரி மாவட்டம் ஊட்டி முதல் கல்லார் வரை மலை ரெயில் பாதையில் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகளை வீசி வருகின்றனர். வனவிலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இது குறித்த வழக்கு விசாரணையின்போது, ஊட்டி முதல் கல்லார் வரை உள்ள மலை ரெயில் பாதையில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை காட்டு யானைகள் சாப்பிடுவதால் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே அந்த கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி அதன் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது.
தூய்மை பணி
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டி முதல் கல்லார் வரை உள்ள மலை ரெயில் பாதையை 2 நாட்கள் தூய்மை பணி தொடங்கியது. ஊட்டி நகராட்சி சார்பில், ஊட்டி முதல் லவ்டேல் ரெயில் நிலையம் வரை தண்டவாளம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், மதுபான பாட்டில்கள் குடிநீர் பாட்டில்கள், சாக்குப்பைகளில் சேகரிக்கப்பட்டன.
இந்த பணியை ஆர்.டி.ஓ. துரைசாமி, ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதேபோல் சம்பந்தப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், வனத்துறை ஊழியர்கள், தனியார் தொண்டு நிறுவனத்தினர் ஊட்டி முதல் கல்லார் வரை பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்ற ஒட்டுமொத்த சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியில் 360 பேர் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு
இதுகுறித்து கலெக்டர் எஸ்.பி. அம்ரித் கூறும்போது, மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளும் தூய்மை பணிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் மலை ரெயில் பாதையில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டாமலும், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமலும் இருக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story