காவிரி ஆற்றில் மூழ்கி மாணவர் சாவு
ஈரோட்டில் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளிக்கூட மாணவர் பரிதாபமாக இறந்தார்.
ஈரோட்டில் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளிக்கூட மாணவர் பரிதாபமாக இறந்தார்.
பள்ளிக்கூட மாணவர்
ஈரோடு வீரப்பன்சத்திரம் கங்கை வீதியை சேர்ந்தவர் அன்பரசு. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி அமுதவள்ளி. இவர்களுடைய மகன் ஹரிஷ்குமார் (வயது 13). இவர் ஈரோடு சி.எஸ்.ஐ. பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வைராபாளையம் குப்பை கிடங்கு அருகே உள்ள காவிரி ஆற்றுக்கு ஹரிஷ்குமார் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றார். அங்கு அனைவரும் உற்சாகமாக குளித்து கொண்டு இருந்தனர். அப்போது ஹரிஷ்குமார் திடீரென ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் தத்தளித்தப்படி கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்க தொடங்கினார்.
தண்ணீரில் மூழ்கி சாவு
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள், “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என அபயக்குரல் எழுப்பினர். இவர்களுடைய சத்தம் கேட்டு அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த சிலர் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் ஹரிஷ்குமார் தண்ணீருக்குள் முழுமையாக மூழ்கி விட்டார். பின்னர் இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கும், ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காவிரி ஆற்றில் இறங்கி மாணவரை தேடினர்.
சிறிது நேரத்தில் மாணவரின் உடல் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஹரிஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவரின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் சக நண்பர்கள் கதறி அழுதது பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story