குன்னூர் அருகே 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்


குன்னூர் அருகே 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்
x
தினத்தந்தி 24 Feb 2022 9:19 PM IST (Updated: 24 Feb 2022 9:19 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே விவசாய தோட்டத்தில் 10 அடி ஆழத்தில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

ஊட்டி

குன்னூர் அருகே விவசாய தோட்டத்தில் 10 அடி ஆழத்தில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

திடீர் பள்ளம்

குன்னூர் அருகே கேத்தி பாலாடா பகுதியில் கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு உள்பட பல்வேறு வகையான காய்கறி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக விளைநிலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப் பட்டு உள்ளன. மேலும் தோட்டங்கள் நடுவே கால்வாயும் செல்கிறது. 

இந்த நிலையில் இந்தப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்தில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளம் நேரம் ஆக ஆக பெரிதாகிக் கொண்டே சென்றது. அத்துடன் 10 அடி ஆழம் வரை அந்த பள்ளம் ஏற்பட்டு அதில் தண்ணீரும் தேங்கி நின்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

அதிகாரிகள் ஆய்வு

இது குறித்து தகவல் அறிந்த அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் அங்கு சென்று அந்த பள்ளத்தை பார்வையிட்டனர். ஆனால் அந்த பள்ளம் அருகே சென்றால் மண் சரிந்து பள்ளத்துக்குள் விழுந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அத்துடன் பள்ளம் ஏற்பட்டு உள்ள இடத்துக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த திடீர் பள்ளம் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 

ஆழ்துளை கிணறு

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, பள்ளம் ஏற்பட்ட பகுதியின் அருகே ஆழ்துளை கிணறு உள்ளது. எனவே பூமிக்கடியில் தண்ணீர் ஊறி பள்ளம் ஏற்பட்டு இருக்கலாம். 

அத்துடன் அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் அதில் நிரம்பி உள்ளது. இருந்தபோதிலும் அந்த பள்ளம் ஏற்பட்டது குறித்து புவியியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளனர் என்றனர்.


Next Story